ரஷ்யா – அமெரிக்கா இடையே பனிப்போர் காலத்தில் செய்துகொள்ளப்பட்ட மத்திய தூர அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து முறைப்படி விலகிவிட்டது அமெரிக்கா.
ஆயுதப் போட்டி மூளும் என்ற அச்சத்தை இது ஏற்படுத்தியுள்ளது.
மத்திய தூர அணு ஆயுத ஒப்பந்தம் (இன்டர்மீடியேட் ரேஞ்ஜ் நியூக்ளியர் ஃபோர்சஸ் டிரீட்டி) 1987-ம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் ரொனால்டு ரீகன் மற்றும் சோவியத் ஒன்றியத் தலைவர் மிகயீல் கோர்பச்சேவ் இடையே கையெழுத்தானது.
500 கி.மீ. முதல் 5,500 கி.மீ தூரம் சென்று தாக்கவல்ல ஏவுகணைகளை இந்த ஒப்பந்தம் தடை செய்தது.
புதியவகை சீரியங்கு ஏவுகணைகளை (குரூய்ஸ் மிசைல்) பயன்பாட்டுக்கு கொண்டுவந்ததன் மூலம் இந்த ஒப்பந்தத்தை ரஷ்யா மீறுவதாக அமெரிக்காவும், நேட்டோ நாடுகளும் இந்த ஆண்டுத் தொடக்கத்தில் இருந்தே குற்றம்சாட்டிவந்தன. ஆனால், இதை ரஷ்யா மறுத்துவந்தது.
9M729 ஏவுகணைகள் பலவற்றை ரஷ்யா பயன்பாட்டுக்கு கொண்டுவந்திருப்பது தொடர்பாக தங்களிடம் ஆதாரங்கள் இருப்பதாக அமெரிக்கா சொல்லியது. இந்த வகை ஏவுகணைகளை நேட்டோ SSC-8 வகை ஏவுகணைகள் என்று புரிந்துவைத்திருந்தது. அப்போது இந்த குற்றச்சாட்டை தமது கூட்டணி நாடுகளின் அமைப்பான நேட்டோவிடம் அமெரிக்கா தெரிவித்தது. அமெரிக்காவின் குற்றச்சாட்டை நேட்டோ நாடுகள் ஏற்றுக்கொண்டன.
இந்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததற்கு ரஷ்யாவே முழு காரணம் என்று அமெரிக்க வெளியுறவு செயலாளர் மைக் பாம்பேயோ ஓர் அறிக்கையில் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
முறைப்படி ஒப்பந்தம் ‘இறந்துவிட்டதாக’ ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் உறுதி செய்யப்பட்டது.
ரஷ்யாவின் சர்ச்சைக்குரிய 9M729 ஏவுகணையால் நேட்டோ நாடுகளின் பாதுகாப்புக்கு உண்டாகும் இடர்களுக்கு பொறுப்பான, அளவான முறையில் பதிலடி தரப்படும் என்று நேட்டோ அமைப்பின் தலைமைச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் குறிப்பிட்டார்.
அணு ஆயுத ஒழிப்புக்குப் பின்னடைவு
ஜொனாதன் மார்கஸ் – பாதுகாப்புச் செய்தியாளர்- பிபிசி
அணு ஆயுதங்கள் அனைத்தையுமே ஒழித்துவிடும் வாய்ப்பு பெற்றதான ஒரே ஒப்பந்தமான மத்திய தூர அணு ஆயுத ஒப்பந்தத்தின் ‘மரணம்’ ஆயுதக் கட்டுப்பாட்டை வலியுறுத்துகிறவர்களுக்கு ஒரு பெரும் பின்னடைவு.
மீண்டெழுகிற ரஷ்யாவினால் ஏற்படக்கூடிய ஆபத்து என்று தாம் கருதுவது பற்றி அமெரிக்க மேலும் மேலும் அதிக கவலை கொண்டுள்ள இந்த நேரத்தில் இந்த ஒப்பந்தம் முறிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ரஷ்யாவோ, அமெரிக்காவோ இத்தகைய ஒப்பந்தங்களின் மதிப்பை உணர்ந்ததாகத் தெரியவில்லை.
பனிப் போர் காலத்தில் எட்டப்பட்ட மற்றொரு ஒப்பந்தமான ‘புதிய தொடக்க ஒப்பந்தம்’ (நியூ ஸ்டார்ட் டிரீட்டி) 2021ம் ஆண்டு பிப்ரவரியில் காலாவதியாகிறது. நீண்டதூரம் சென்று தாக்கும் அணு ஆயுதங்களை மட்டுப்படுத்துவதற்கான இந்த ஒப்பந்தம் புதுப்பிக்கப்படும் வாய்ப்பு மிகக் குறைவாகவே இருப்பதாகத் தெரிகிறது.
சோவியத் ஒன்றியத்தின் சிதைவுக்குப் பிறகு பதற்றம் குறைவாகவும், அதனால் ஆயுதக் கட்டுப்பாடுகளின் முக்கியத்துவம் குறைவாகவும் தெரிந்தது. தற்போது பதற்றங்கள் அதிகரிக்கும் நிலையில் ஸ்திரத்தன்மையைக் காப்பாற்ற இந்த ஒப்பந்தங்கள் பெரிய பங்காற்றக்கூடும்.
ஆனால், செயற்கை அறிவுத் தொழில்நுட்பம், ஹைப்பர்சானிக் ஏவுகணைத் தொழில்நுட்பம் போன்ற அபாயகரமான தொழில்நுட்பங்கள் வளர்ந்துள்ள நிலையில், இருக்கும் ஆயுதக் கட்டுப்பாடுகளும் சிக்கலுக்கு உள்ளாகின்றன. -BBC_Tamil