சட்டவிரோதமாக இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமது அதீப் இன்று, சனிக்கிழமை, காலை மாலத்தீவு அதிகாரிகளிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டார்.
தமது சொந்த நாட்டில் தமது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் இந்தியாவில் அரசியல் தஞ்சம் வேண்டும் என்று அவர் விடுத்த கோரிக்கையை இந்திய அரசு நிராகரித்துவிட்டதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அகமது அதீப் நடுக்கடலிலேயே தடுக்கப்பட்டு இந்திய எல்லைக்குள்ளேயே அனுமதிக்கப்படவில்லை என்பதால், அவர் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் செய்திகள் தவறானவை என்று இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
யார் இந்த அகமது அதீப்?
மாலத்தீவு அதிபராக அப்துல்லா யாமீன் இருந்தபோது அவர் சென்ற படகில் குண்டுவைத்து 2015 செப்டம்பரில் அவரைக் கொலை செய்ய முயன்றதாக நாடாளுமன்றத்தால் அதே ஆண்டு நவம்பரில் பதவி நீக்கம் செய்யப்பட்டார். 2016இல் அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார்.
ஊழல் குற்றச்சாட்டின்பேரில் மூன்று ஆண்டுகள் சிறையில் கழித்த பின், மாலத்தீவில் வீட்டுச்சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அதீப் சென்ற ஆகஸ்டு ஒன்றாம் தேதி தூத்துக்குடி வந்த இழுவைக்கப்பல் ஒன்றின் மூலம் பயணித்து இந்திய எல்லைக்குள் நுழைய முயன்றார்.
தூத்துக்குடியில் இருந்து கடந்த ஜூலை 11ஆம் தேதி மாலத்தீவிற்கு கருங்கல் ஏற்றி சென்ற விர்கோ 9 என்ற இழுவைப் படகில் இந்தோனீசியாவை சேர்ந்த எட்டு ஊழியர்களும், ஓர் இந்தியரும் சென்றுள்ளனர்.கடந்த 27ஆம் தேதி மாலத்தீவில் சரக்கை இறக்கிவிட்டு, ஆகஸ்டு 1ஆம் தேதி தூத்துக்குடி திரும்பிய அந்த இழுவைப் படகில் பத்தாவதாக ஒரு நபர் வந்துள்ளார்.
விசாரணையின்போது, முறையான பயண ஆவணங்கள் எதுவும் இன்றி இந்தியாவுக்குள் நுழைய முயன்ற அந்தப் பத்தாவது நபர் அதீப் என்று தெரிய வந்தது.
இந்திய எல்லைக்குள் நுழைவதெற்கென சில குறிப்பிட்ட நுழைவுப் புள்ளிகள் உள்ளன. அந்த இடங்கள் எவற்றின் மூலமும் அதீப் நுழையவில்லை என்பதாலும், முறையான பயண ஆவணங்கள் எதுவும் இல்லை என்பதாலும் அவர் இந்திய எல்லைக்குள் நுழையவில்லை என்பதாலும் இந்தியாவுக்குள் அவரை அனுமதிக்க முடியாது என்றும் இந்திய வெளியுறவுத் துறையின் செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமார் தெரிவித்திருந்தார்.
- சீனாவைவிட இந்தியாவுக்கு முக்கியத்துவம் தரும் மாலத்தீவு: ஓர் அலசல்
- சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைய முயன்ற மாலத்தீவு முன்னாள் துணை அதிபர்
இந்திய எல்லைக்குள் நுழைய அதீப் அனுமதிக்கப்படாததால், இந்தியக் கடலோரக் காவல் படையின் கட்டுப்பாட்டில் அவர் இழுவைப்படகிலேயே தங்க வைக்கப்பட்டிருந்தார்.
இதனிடையே இன்று காலை கடல் வழியாக தூத்துக்குடி அருகே சர்வதேச கடல் எல்லையில் வைத்து மாலத்தீவு அதிகாரிகளிடம் அதீப் ஒப்படைக்கப்பட்டார்.
அவர் இந்தியாவுக்குத் தப்ப உதவியவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாலத்தீவு காவல்துறை அறிவித்துள்ளது. -BBC_Tamil