காஷ்மீர் பிரச்சனையில் மூன்றாவது தரப்பு தலையீட்டை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கோரி உள்ளார்.
காஷ்மீர் பிரச்சனை இந்த பிராந்திய சிக்கலாக உருவெடுக்கலாம் என்று கூறியுள்ள அவர், ஒரு ஸ்திரதன்மையை கொண்டுவர நிச்சயம் மூன்றாம் தரப்பு தலையீடு அவசியம் என கூறி உள்ளார்.
இம்ரான் கான் பகிர்ந்துள்ள ட்வீட்டில், “அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், காஷ்மீர் பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்வதாக கூறினார். இந்திய ஆக்கிரமிப்பு படைகளால் எல்லையில் நிலைமை மோசமாகி வரும் சூழலில் மூன்றாம் தரப்பு தலையிடுவது தேவையாகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
சாமானியர்கள் மீது தாக்குதல்
இந்தியா – பாகிஸ்தான் இடையிலான கட்டுப்பாட்டு எல்லைக் கோடு அருகே கொத்து எறி குண்டுகளை வைத்து இந்தியா தாக்குதல் நடத்தியுள்ளதாக இம்ரான் கான் குற்றஞ்சாட்டினார். ஆனால், இந்தியா இதனை மறுத்துள்ளது.
அவர் பகிர்ந்துள்ள ட்வீட்டில், “எல்லைத் தாண்டி அப்பாவி குடிமக்கள் மீது தாக்குதல் நடத்திய இந்தியாவுக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். 1983-ம் ஆண்டின் சர்வதேச ஆயுதங்கள் ஒப்பந்தம் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டத்தையும் மீறி இந்தியா கொத்து குண்டுகளை பயன்படுத்தியுள்ளது. சர்வதேச பாதுகாப்பு மற்றும் அமைதிக்கு அச்சுறுத்தலாக விளங்கும் காஷ்மீர் விஷயத்தில் ஐ.நாவின் பாதுகாப்பு கவுன்சில் கவனம் செலுத்த வேண்டும்” என்று அவர் வலியுறுத்தி உள்ளார்.
- காஷ்மீர் விவகாரம்: மீண்டும் தலையிட விரும்பிய டிரம்ப்; மறுப்புத் தெரிவித்த ஜெய்சங்கர்
- ‘வெள்ளைக் கொடியுடன் வந்து உடல்களை எடுத்துக்கொள்ளுங்கள்’ – பாகிஸ்தானிடம் கூறும் இந்தியா
டிரம்ப்
முன்னதாக. இந்தியா மற்றும் பாகிஸ்தான் விரும்பினால் இரு நாடுகளிடையேயான காஷ்மீர் விவகாரத்தில் தலையிட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு தயார் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்து இருந்தார்.
இம்ரான் கான் அமெரிக்கா சென்று இருந்த போது, காஷ்மீர் பிரச்சனையில் இந்தியா-பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக இம்ரான் கானிடம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதியளித்துள்ளார். மேலும், பிரதமர் மோதி தன்னை சந்தித்தபோது, காஷ்மீர் விஷயத்தில் மத்தியஸ்தம் செய்யக் கோரிக்கை விடுத்தார் என்றும் டிரம்ப் தெரிவித்து இருந்தார்.
ஆனால், இதனையும் இந்தியா மறுத்தது.
“இந்தியாவும் பாகிஸ்தானும் அழைத்தால், காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக டிரம்ப் ஊடகங்களிடம் கூறியதாக அறிகிறோம். ஆனால், காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய இந்தியா அமெரிக்காவை வேண்டவில்லை. பாகிஸ்தானுடனான அனைத்து விவகாரத்தையும் இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே பேசி தீர்க்க வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக இருக்கிறது. பாகிஸ்தானுடன் பேசுவதற்கு அந்நாடு எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்த வேண்டும் என்பது நிபந்தனையாக இருக்கும். இந்தியா பாகிஸ்தான் இடையே நிலவும் பிரச்சனைகளுக்கு இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கான அடிப்படையை சிம்லா ஒப்பந்தம் மற்றும் லாகூர் பிரகடனம் வழங்குகிறது” என்று அமெரிக்காவில் உள்ள இந்தியா தூதரகம் இது தொடர்பாக ஓர் அறிக்கையை வெளியிட்டது.
மத்திய வெளியுறத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் இதனையே அப்போது குறிப்பிட்டார். -BBC_Tamil