‘பணிப்பெண்ணுடன் பாலியல் உறவு முட்டாள்தனமானது’

அனைத்துலக நாணய நிதியத்தின் ( ஐ.எம்.ஃஎப்) முன்னாள் தலைவரான டாமினிக் ஸ்ட்ராஸ் கான், நியூயார்க் நகர நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் ஒரு பணிப்பெண்ணுடன் பாலியல் உறவு வைத்துக்கொண்டது முட்டாள்தனமானது என்றாலும் அது சம்மதத்தின் பேரிலேயே நடைபெற்றது என்று ஒரு புத்தகம் தற்போது கூறுகிறது.

இந்த ஆண்டு மே மாதம் அந்த ஹோட்டலில் என்ன நடைபெற்றது என்பது குறித்து தன் தரப்பு கருத்துக்களை அவரது வாழ்க்கை சரித்திரத்தை எழுதிய எழுத்தாளர் அந்தப் புத்தகத்தில் வெளியிட்டுள்ளார்.

டாமினிக் ஸ்ட்ராஸ் கான் தங்கியிருந்த ஹோட்டலின் ஒரு பணிப்பெண், அவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார் என்று அப்போது குற்றஞ்சாட்டியிருந்தார்.

ஸ்ட்ராஸ் கான் தரப்பு கருத்துக்களை வெளியிடும் வகையில் வந்துள்ள அந்தப் புத்தகத்தில், நஃபிஸாட்டோ டியாலோ எனும் அந்தப் பணிப்பெண் தன்னை பாலியல் உறவுக்கு அழைப்பது போன்ற ஒரு பார்வையை வெளியிட்டார் எனவும், அதை அவர் ஒரு அழைப்பாக ஏற்றுக் கொண்டார் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆனால் அந்தப் பணிப்பெண்ணின் வழக்கறிஞர்கள் இந்த வாதத்தை ஏற்க மறுத்துள்ளனர்.

எனினும் ஸ்ட்ராஸ் கான் மீதான குற்ற வழக்கு, அரச தரப்பு வழக்கறிஞர்களால் பின்னர் விலக்கிக் கொள்ளப்பட்டது. டியாலோ தனது குற்றச்சாட்டுகளில் பொய் கூறியிருந்தார் என்று அரச தரப்பு நீதிமன்றத்தில் கூறியது. இருந்தபோதிலும், அந்தப் பெண்மணி சிவில் நீதிமன்றத்தில் வழக்கை முன்னெடுத்து வருகிறார்.

“அஃபையர்ஸ் டி எஸ் கே- தி செகண்ட் என்குயரி” எனும் தலைப்பில் பிரெஞ்சு பத்திரிகையாளர் மைக்கேல் டாப்மேன் எழுதியுள்ள அந்தப் புத்தகம் வியாழக்கிழமை(1.12.11) அன்று விற்பனைக்கு வந்துள்ளது.

அனைத்துலக நாணய நிதியத்தின் தலைவராக இருந்த டாமினிக் ஸ்ட்ராஸ் கானுக்கும் அந்தப் பெண்மணிக்கும் இடையே, இந்த ஆண்டு மே மாதம் 14-ம் தேதி அந்த ஹோட்டலில் என்ன நடந்தது என்பது குறித்து, தனது தரப்பின் விரிவான கருத்தையே இந்தப் புத்தகம் வெளியிடுகிறது என்று நம்பப்படுகிறது.

அந்தப் புத்தகத்தில், ஸ்ட்ராஸ் கான் தங்கியிருந்த அறைக்கு, அவர் குளித்துவிட்டு நிர்வாணமாக வெளிவந்த நேரத்தில், டியாலோ நுழைந்தார் என்றும், அப்போது அவரது பார்வை பாலியல் உறவுக்கு அழைப்பது போல இருந்தது என்று கருதி அதை ஒரு அழைப்பாக அவர் ஏற்றார் என்று கூறப்பட்டுள்ளது.

“குற்றச்சாட்டுகள் அபத்தமானவை”

அந்த ஆறு நிமிட பாலியல் தொடர்பு முட்டாள்தனமானது என்றாலும், சம்மதத்தின் பேரிலேயே நடைபெற்றது என 62 வயதான ஸ்ட்ராஸ் கான் பின்னர் தெரிவித்திருந்தார்.

இந்த சர்ச்சையின் காரணமாக அவர் ஐ.எம்.ஃஎப்பின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலக வேண்டிய நிலைக்கு ஆளானார். அத்துடன் அடுத்த ஆண்டு பிரஞ்சு குடியரசுத் தேர்தலில் போட்டியிடும் கனவும் தகர்ந்து போனது.

பிரான்ஸில் குடியரசுத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் அதற்கு முன்னர், தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்கிற சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக அந்தப் பணிப்பெண் இருக்கலாம் என்று அவர் நம்புவதாகவும் அந்தப் புத்தகத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

மேலும் தனக்கு ஐ.எம்.ஃஎப்பால் வழங்கப்பட்டிருந்த ‘பிளாக் பெர்ரி’ தொலைபேசியும் அந்தப் பெண்ணால் அறையை விட்டு வெளியேறும் சமயம் திருடப்பட்டிருக்கலாம் எனவும் அந்தப் புத்தகம் தெரிவிக்கிறது.

ஆனால் டியாலோவின் வழக்கறிஞர்கள் இந்தக் கூற்றுகள் அபத்தமானவை மற்றும் முழுமையான ஒரு கற்பனை என்று கூறியுள்ளனர்.

இந்தப் புத்தகத்தை ஆறு பேரின் நேர்காணல் மற்றும் தனது புலனாய்வின் அடிப்படையில் தான் எழுதியதாக ஆசிரியர் டாப்மேன் சொல்கிறார்.

எனினும் இந்தப் புத்தகம் குறித்து தனது கருத்துக்களை ஸ்ட்ராஸ் கான் இதுவரை வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.

-BBC