டெக்சாஸ் மற்றும் ஒஹாயோ பகுதிகளில் நடந்த இருவேறு துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் 29 பேர் பலியாகி உள்ளனர்.
டெக்சாஸ் துப்பாக்கிச்சூடு
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்திலுள்ள எல் பசோ எனும் நகரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 20 பேர் கொல்லப்பட்டனர்; 26 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
“டெக்சாஸின் வரலாற்றில் இது மிகவும் மோசமான தினங்களில் ஒன்று” என்று இந்தத் தாக்குதல் குறித்து அம்மாகாண ஆளுநர் கிரெக் அபாட் கருத்துத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா – மெக்ஸிகோ எல்லைக்கு அருகே உள்ள ‘சியில்லோ விஸ்டா மால்’ எனும் வணிக வளாகத்தை ஒட்டியுள்ள வால்மார்ட் கடையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலை நடத்திய ஒரே தாக்குதலாளியாக கருதப்படும் 21 வயதான ஒருவரை காவல்துறையினர் சம்பவ இடத்திலேயே கைது செய்துள்ளனர். காவல்துறையினரின் இந்த உடனடி நடவடிக்கைக்கு அம்மாகாண ஆளுநர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
பிடிபட்டுள்ள துப்பாக்கிதாரியின் பெயர் பேட்ரிக் கிருசிஸ் என்றும் தாக்குதல் நடத்தப்பட்ட இடத்திலிருந்து சுமார் 1,046 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள டல்லாஸ் நகரை சேர்ந்தவர் என்றும் அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
கண்காணிப்பு ஒளிப்பட கருவியில் பதிவான சில புகைப்படங்கள் வெளிவந்துள்ளன. அதில் அடர் நிற மேலாடையை உடுத்தியுள்ள நபர், கையில் துப்பாக்கியுடன் காணப்படுகிறார்.
மோசமான தாக்குதல்
நவீன அமெரிக்கா வரலாற்றில் நடந்த எட்டாவது மோசமான தாக்குதல் என இந்த டெக்சாஸ் தாக்குதல் வர்ணிக்கப்படுகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த தாக்குதல் சம்பவத்தை ‘கோழைத்தனமான செயல்’ என வர்ணித்துள்ளார்.
ட்விட்டரில் அவர் பகிர்ந்துள்ள ட்வீட்டில், “அப்பாவி மக்களை கொல்வதை எதனைக் கொண்டும் நியாயப்படுத்த முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார்.
கொல்லப்பட்டவர்கள் குறித்த முழுமையான தகவல்கள் தெரியவில்லை. ஆனால், பலியானவர்களில் மூன்று பேர் மெக்சிகோ நாட்டை சேர்ந்தவர்கள் என அந்நாட்டு அதிபர் ஆண்ட்ரஸ் மேனுவல் கூறியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவிக்கிறது.
- அமெரிக்காவில் 21 வயது இளைஞர் சுட்டதில் 20 பேர் பலி; 26 பேர் காயம்
- துப்பாக்கி கலாசாரம்: அமெரிக்க எம்.பி.க்கள் தர்ணா போராட்டம்
வெள்ளை தேசியவாதம்
இந்தத் தாக்குதல் தொடர்பாக அடையாளம் தெரியாத நபரால் பகிரப்பட்ட வெள்ளை தேசியவாத அறிக்கை குறித்து போலீஸ் மற்றும் எஃப்.பி.ஐ விசாரித்து வருகிறது.
உள்ளூர் ஹிஸ்பானிக் சமூகத்தை குறி வைத்தே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்த அறிக்கை விவரிக்கிறது.
ஒஹாயோ துப்பாக்கிச்சூடு
இதுபோல டைடூன் பகுதியில் நடந்த மற்றொரு துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் கொல்லப்பட்டதாகவும் , 16 பேர் காயமுற்றதாகவும் ஒஹாயோ போலீஸார் தெரிவிக்கின்றனர்.
உள்ளூர் நேரப்படி நள்ளிரவு ஒரு மணிக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது.
துப்பாக்கிதாரி சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டதாக போலீஸார் கூறுகின்றனர்.
காயமுற்றவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
துப்பாக்கிச் சூடு தொடங்கிய உடனே போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும், உடனடியாக பதிலடி கொடுத்து, ஒரு முடிவுக்கு கொண்டுவந்ததாகவும் , போலீஸார் ஒரு ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளனர்.
போலீஸ் துணை தலைவர் கார்பர், “துப்பாக்கிதாரி குறித்து எந்த தகவல்களும் தெரியவில்லை. இந்தத் தாக்குதலுக்கான நோக்கம் குறித்து ஆராய்வதில் முனைப்பாக இருக்கிறோம்” என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். -BBC_Tamil