கார்கள் மோதி கோர விபத்து – 19 பேர் பலி!

எகிப்து நாட்டில், கெய்ரோ நகரின் மத்தியப் பகுதியில், அதிவேகமாகச் சென்ற கார், எதிரே வந்த கார்களின் மீது மோதி வெடித்துச் சிதறியது.

இதில் 19 பேர் தீயில் எரிந்தும், உடல் சிதறியும் உயிரிழந்தனர். அங்குள்ள நெருக்கடி மிகுந்த சாலையில் போக்குவரத்து விதியை மீறி கார் ஒன்றை, மர்ம நபர் ஒருவர், அதி வேகத்தில் ஓட்டிச்சென்றார்.

தேசிய புற்றுநோய் மையம் அருகில் சென்ற போது, திடீர் என்று எதிர் திசையில் வந்த 3 கார்கள் மீது மோதியதில், மர்ம நபர் ஓட்டிச்சென்ற கார் வெடித்து சிதறியது.

இதில் 4 கார்களும் தீப்பற்றி கொளுந்து விட்டு எரிந்தன. தீயணைப்பு படையினரும், போலீசாரும் விரைந்து சென்று தீயை அணைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவத்தில் 19 பேர் உடல் கருகி உயிரிழந்ததாகவும், 30 பேர் படுகாயம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காரில் வெடிகுண்டு நிரப்பட்டு இருந்ததா, தற்கொலை படை தாக்குதலா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

-https://athirvu.in