இந்திய நிர்வாகத்தில் உள்ள காஷ்மீருக்கு இருந்த சிறப்புரிமைகளை பறிக்கவும், அந்த மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கவும் இந்தியா முடிவெடுத்த நிலையில் அதற்கு பாகிஸ்தான் கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளது.
இதையடுத்து அணு ஆயுத வல்லமை மிக்க இரு அண்டை நாடுகளின் உறவில் சிக்கல் தீவிரமடைந்துள்ளது.
இனி இந்தியாவுடன் இருதரப்பு வர்த்தகத்தை முற்றாகத் துண்டிப்பதும், தூதரக உறவைக் குறைப்பதும் அதில் சில.
இதனிடையே பாகிஸ்தானுக்கான இந்தியத் தூதரை அது வெளியேற்றுவதுடன், இந்தியத் தலைநகர் டெல்லியில் உள்ள தமது தூதரையும் அது திரும்ப அழைக்கிறது.
இந்தியாவில் கடந்த சில நாள்களாக நடந்த காஷ்மீர் தொடர்பான நிகழ்வுகளைத் தொடர்ந்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் அந்நாட்டின் தேசிய பாதுகாப்புக் குழு புதன்கிழமை கூடியது. “இந்தியா தன்னிச்சையாக , சட்ட விரோதமாக எடுத்த முடிவால் எழுந்துள்ள நிலைமை, இந்திய நிர்வாகத்திலுள்ள ஜம்மு காஷ்மீர் மற்றும் எல்லை கட்டுப்பாட்டு பகுதியின் நிலைமை பற்றி இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது” என்று பாகிஸ்தான் தரப்பு கூறியுள்ளது.
அந்தக் கூட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக மிக முக்கியமான 5 முடிவுகள் எடுக்கப்பட்டன.
5 முடிவுகள்
- இந்தியாவோடு இருக்கும் தூதரக உறவுகளை குறைப்பது.
இந்தியாவுடன் இருதரப்பு வர்த்தகத்தை துண்டிப்பது.
இருதரப்பு உறவு ஏற்பாடுகளை மீளாய்வு செய்வது.
பாதுகாப்பு கவுன்சில் உள்பட ஐக்கிய நாடுகள் அவைக்கு இந்த பிரச்சனையை கொண்டு செல்வது.
பாகிஸ்தானின் சுதந்திர நாளான ஆகஸ்ட் 14-ஐ காஷ்மீர் மக்களின் வீரத்திற்கும், சுயாட்சி உரிமைக்கான அவர்களின் நியாயமான போராட்டத்திற்குமான ஆதரவு தெரிவிக்கும் நாளாகக் கடைபிடிப்பது மற்றும் இந்திய சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ஐ கறுப்பு நாளாக கடைபிடிப்பது.
ஆகியவையே அந்த ஐந்து முடிவுகள்.
இந்தியா எங்களிடம் கலந்தாலோசிக்கவில்லை – அமெரிக்கா
இதனிடையே “ஊடகங்களில் வெளியாவதைப் போல ஜம்மு காஷ்மீரின் சிறப்புரிமையை அகற்றுவதற்கு முன்பாக இந்தியா எங்களிடம் தகவல் சொல்லவும் இல்லை, கலந்தாலோசிக்கவும் இல்லை” என்று அமெரிக்க வெளியுறவுத் துறையின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரப் பிரிவு தமது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. -BBC_Tamil