வெனிசுவேலா மீது பொருளாதாரத் தடை விதித்தார் ட்ரம்ப்

வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கொலஸ் மதுரோ, அவரது அரசாங்கத்துக்கெதிரான புதிய நகர்வாக, வெனிசுவேலாக்கெதிராக பொருளாதாரத் தடையொன்றை விதிக்கும் நிறைவேற்று ஆணையொன்றில் ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கைச்சாத்திட்டுள்ளார்.

அந்தவகையில், நேற்று இரவு கைச்சாத்திடப்பட்ட குறித்த நிறைவேற்று ஆணையின்படி ஐக்கிய அமெரிக்காவிலுள்ள வெனிசுவேலா அரசாங்கத்தின் சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்படும் என்பதோடு, வெனிசுவேலா அதிகாரிகளுடனான பரிமாற்றங்களும் தடை செய்யப்பட்டுள்ளன.

முன்னைய பொருளாதாரத் தடைகள், வெனிசுவேலாவின் ஏற்றுமதி வருமானத்தின் பெரும்பகுதியை அளிக்கும் வெனிசுவேலாவின் எண்ணெய் தொழிற்துறையை இலக்கு வைத்திருந்தன.

எவ்வாறாயினும், பணத்தை அனுப்புவதற்கும், மனிதாபிமான உதவிக்கும் விலக்குகளை ஐக்கிய அமெரிக்கா விடுக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், உள்ளூர் வானொலி அலைவரிசையான யூனியன் றேடியோவுடனான நேர்காணலொன்றில், ஐக்கிய அமெரிக்க அரசாங்கத்தால் திட்டமிடப்பட்ட நிலைமாறுமாறுகால சட்டரீதியான ஆட்சிக்கவிழ்ப்பொன்றை வெனிசுவேலா எதிர்கொள்கின்றதென அந்நாட்டின் உப ஜனாதிபதி டெல்சி றொட்றிகஸ் கூறியுள்ளார்.

ஜனாதிபதி நிக்கொலஸ் மதுரோவை பதவியிலிருந்து அகற்றும் நோக்கில் தன்னை இடைக்கால ஜனாதிபதியாக வெனிசுவேலா தேசிய சபையின் சபாநாயகர் குவான் குவைடோ ஐக்கிய அமெரிக்கா மற்றும் டசின் கணக்கான வேறு நாடுகளுடன் ஆதரவுடன் இவ்வாண்டின் ஆரம்பத்தில் பிரகடனப்படுத்தியிருந்தார்.

இந்நிலையில், சர்வதேச ஆதரவு, ஜனாதிபதி நிக்கொலஸ் மதுரோவுக்கெதிரான எதிர்ப்புக்கு மத்தியிலும் குவான் குவைடோவின் நடவடிக்கைள் வெற்றியளிக்காததுடன், வெனிசுவேலா பாதுகாப்புப் படைகளின் ஆதரவுடன் பதவியை ஜனாதிபதி நிக்கொலஸ் மதுரோ தக்க வைத்துள்ளார்.

-tamilmirror.lk