இந்தியா – பாகிஸ்தான் இடையே செல்லும் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் நிறுத்தம்

காஷ்மீருக்கு இந்தியா அளித்துவந்த சிறப்புரிமையை பறித்ததுடன், காஷ்மீரை இரண்டாகப் பிரித்து இரண்டையும் அதிகாரம் குறைந்த யூனியன் பிரதேசங்களாக இந்தியா அறிவித்துள்ள நிலையில், அதை எதிர்த்து தமது தூதரை திரும்பப் பெறுவதாக பாகிஸ்தான் அறிவித்தது. வணிக உறவையும் துண்டித்துக் கொள்வதாக அறிவித்திருந்தது.

இந்நிலையில் இந்தியா – பாகிஸ்தான் இடையே செல்லும் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்திவிடுவதாக பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷீத் அகமது கூறியுள்ளார். அவரை மேற்கோள் காட்டி ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் இத்தகவலைத் தெரிவிக்கிறது.

இன்று வாகா எல்லையில் அந்த ரயிலை இயக்கி வந்த பாகிஸ்தான் ஓட்டுநரும், ஊழியர்களும் ரயிலை நிறுத்திவிட்டு, இந்தியாவுக்குள் வர மறுப்புத் தெரிவித்துவிட்டனர். இந்தியப் பகுதிக்குள் இந்திய ஓட்டுநரும், ஊழியர்களும் ரயிலை இயக்கட்டும் என்று அவர்கள் தெரிவித்துவிட்டனர். இதையடுத்து 3 மணி நேர தாமதத்துக்குப் பிறகு இந்திய ஊழியர்கள் அந்த ரயிலை அட்டாரி எல்லை வழியாக இந்தியாவுக்குள் கொண்டு வந்தனர்.

வாரத்துக்கு இரண்டு முறை இயக்கப்படும் இந்த ரயில் டெல்லியில் இருந்து பாகிஸ்தானின் லாகூர் நகரம் வரை இயக்கப்படுகிறது. -BBC_Tamil