“வெற்றிபெற முடியாத இடங்களை அம்னோவிடம் திருப்பிக் கொடுங்கள்”

பிஎன் உறுப்புக் கட்சிகள் தங்களால் வெற்றிபெற முடியாத இடங்களை அம்னோவிடமே திருப்பிக் கொடுத்துவிட வேண்டும். பினங்கு பேராளர் ஒருவரின் விருப்பம் இது.

கட்சித் தலைவரின் தலைமையுரைமீது நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்ட மூசா ஷேக் பாட்சிர், 2008-பொதுத் தேர்தலில் நின்று தோற்றவர்கள் தாங்கள் போட்டியிட்ட இடங்களைத் திரும்ப வெல்ல முடியாது என்றால் அவற்றை அம்னோவிடம் திருப்பிக் கொடுக்க வேண்டும்; அம்னோ அவற்றைத் திரும்பக் கைப்பற்ற முயலும் என்றார்.

“அம்னோ, மலாய்க்காரர் பெரும்பான்மையாக உள்ள இடங்களை பிஎன் உறுப்புக்கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு விட்டுக்கொடுத்து  தியாகம் செய்துள்ளது.

“ஏனென்றால் மலாய்க்காரர்களிடமும் அம்னோவிடமும் பிஎன் உணர்வுக்கேற்ப அரவணைத்துச் செல்லும் பண்புண்டு. ஆனால், அவர்கள் அடுத்த தேர்தலில் அந்த இடங்களில்  வெற்றிபெற முடியாது என்ற நிலை இருக்குமானால் அவற்றை அம்னோவிடம் திரும்பக் கொடுத்து விட வேண்டும்.”

மசீசவும் கெராக்கானும் சில தொகுதிளில் வெற்றிபெற முடியாத நிலை இருப்பதால் அந்தத் தொகுதிகளை அம்னோவிடம் ஒப்படைத்துவிட வேண்டும் என்று மூசா வலியுறுத்தினார்.

“அந்த இடங்களை மீண்டும் கைப்பற்றவும் பிஎன் வெற்றியை உறுதிப்படுத்தவும் அவ்வாறு செய்தல் வேண்டும்”, என்றாரவர்.

இக்கோரிக்கை ஒன்றும் புதிதல்ல.இதற்கு முன்பும் அம்னோ தலைவர்கள் பலர் இதே கோரிக்கையை முன்வைத்தது உண்டு.

எடுத்துக்காட்டுக்கு, மலாக்காவில் பாச்சாங் தொகுதி கெராக்கானுக்கு கொடுக்கப்பட்டு 2004-இலும் பின்னர் மீண்டும் 2008-இலும் அந்த இடத்தில் அது தோற்றுப்போனதால் அத்தொகுதியை அம்னோவிடம் கொடுக்க வேண்டும் அல்லது வெற்றிபெறும் வாய்ப்புள்ள வேறு ஒரு பங்காளிக் கட்சிக்குக் கொடுக்க வேண்டும் என்றவர்கள் கூறினார்கள்.

பிஎன் வெற்றி பெறுவதுதான் முக்கியம். அந்தக் கண்ணோட்டத்துடனேயே உறுப்புக்கட்சிகள் இதனைப் பார்க்க வேண்டும் என்று மூசா கூறினார்.

பினாங்கைத் திரும்பக் கைப்பற்ற அம்னோ கங்கணம்

வேறு சில மாநிலங்களிலும் பிஎன் வெற்றியைப் பதிவு செய்ய உறுப்புக்கட்சிகள் தங்களுக்கிடையில் தொகுதிகளை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று முன்மொழியப்பட்டுள்ளது.அதன் தொடர்பில் கூட்டரசுப் பிரதேசமான கோலாலம்பூரில் பத்து, கெப்போங் ஆகிய தொகுதிகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. 

எதிர்த்தரப்புத் தலைவர்களில் பலர் பினாங்கைச் சேர்ந்தவர்கள் என்றாலும் அம்மாநிலத்தைத் திரும்பக் கைப்பற்றுவதில் பினாங்கு அம்னோ உறுதியாக இருக்கிறது என்றும் மூசா கூறினார்.

பாஸ் துணைத் தலைவர் முகம்மட் சாபு, டிஏபி தலைவர் கர்பால் சிங், தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் முதலானோர் பினாங்கைச் சேர்ந்தவர்கள்.

“எனவே, அது ஒரு கடும் போராட்டமாகத்தான் இருக்கும். ஆனாலும் அம்மாநிலத்தைத் திரும்பக் கைப்பற்றுவதில் பினாங்கு அம்னோ உறுதியாக உள்ளது”, என்றார். 

டிஏபி-இல் உள்ள இந்தியர்கள் வெளியேற வேண்டும்

டிஏபி தலைவர் ஒருவர் பேராக் மந்திரி புசார் ஜம்ரி அப்துல் காடிரை “மெடலிக் கருப்பர்” என்று குறிப்பிட்டிருப்பதைச் சுட்டிக்காட்டிய மலாக்கா பேராளர் ஹஸ்னூர் செடாங் உசேன், அதன் காரணமாகவே டிஏபி-இல் உள்ள இந்தியர்கள் வெளியேற வேண்டும் என்றார்.

இந்தத் தரக்குறைவான பேச்சு இனவாதத்தைப் பிரதிபலிப்பதுடன் ஒருவரின் தோற்றத்தை ஏளனப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது என்று ஹஸ்னூர் கூறினார்.

“டிஏபி-யில் அப்படிப்பட்ட தோல்நிறம் கொண்ட உறுப்பினர்களோ தலைவர்களோ இல்லாததுபோல பேராக்கின் இங்கா கோர் மிங் பேசியுள்ளார்.”

இங்கா, ஜம்ரியை பின்வாசல் வழி நுழைந்த தலைவர் என்றும் வருணித்துள்ளார் என்று ஹஸ்னூர் குறிப்பிட்டார்.

இதற்குப் பொருள் என்ன என்று வினவிய அவர், தமக்குத் தெரிந்தவரை மாற்றரசுக் கட்சி அரசியல்வாதி ஒருவர்தான் பின்வாசல் வழியாக செல்வதை விரும்புகிறவர் என்றார்.

“பெயரைச் சொல்ல வேண்டியதில்லை. எல்லாருக்கும் அது தெரியும்”, என்றவர் சொன்னதும் பேராளர்கள் கலகலவென்று சிரித்தனர். 

கடந்த வாரம் ஜம்ரியை “மெடல்லிக் கருப்பர்” என்று குறிப்பிட்ட இங்கா அதன்பின்னர் அதை மீட்டுகொண்டதுடன் அவ்வாறு சொன்னதற்காக மன்னிப்பும் கேட்டுக்கொண்டார்.

மனித உரிமைகளையும் ஜனநாயகத்தையும் காக்கப் போராடுவதாகக் கூறிக்கொள்ளும் மாற்றரசுக் கட்சி உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தை(ஐஎஸ்ஏ) அகற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டு வந்திருக்கிறது.

“ஆனால், அம்னோ தலைவர், ஐஎஸ்ஏ அகற்றப்படுவதாக அறிவித்தபோது அன்வார் இப்ராகிமோ மற்ற எதிர்த்தலைவர்களோ ஒரு நன்றிகூட சொல்லவில்லை.

“அம்பிகா (ஸ்ரீநிவாசன்)கூட நன்றி சொல்லவில்லை.குறைந்த பட்சம் இந்தச் சீரமைப்புக்காகவாவது பிரதமருக்கு நன்றி தெரிவித்திருக்கலாமே.”

இது மாற்றரசுக் கட்சியில் முரண்பாடுகள் நிரம்பி இருப்பதைக் காண்பிக்கிறது. இதை மக்கள் குறிப்பாக மலாய்க்காரர்கள் உணர வேண்டும் என்றும் ஹஸ்னூர் கேட்டுக்கொண்டார்.

TAGS: