ஹாங்காங் விமான நிலையத்தை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள்!

ஹாங்காங்கில் அந்நாட்டு அரசுக்கு எதிரான போராட்டக்காரர்கள், விமான நிலையத்தை முற்றுகையிட்டதால் அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டன. ஹாங்காங்கில் குற்றமிழைத்தவர்களை சீனாவுக்கு கொண்டு சென்று விசாரிக்கும் சட்டமசோதாவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் அதனை நிறைவேற்றாமல் அந்நாட்டு அரசு கைவிட்டது.

ஆனாலும் ஹாங்காங் அரசின் தலைவர் பதவி விலகக் கோரி போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போராட்டத்தின் போது போலீசார் தாக்கியதில், பெண் ஒருவரது பார்வை பாதிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதனை கண்டித்து ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் ஹாங்காங் விமான நிலையத்தை முற்றுகையிட்டனர்.

இதனால் அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டன. நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகரித்த நிலையில் அங்கு காத்திருந்த பயணிகளும், போராட்டக்காரர்களும் வெளியேறினர்.

அதே சமயம் நேற்றைய போராட்டத்தின் போது போராட்டக்காரர்களை கலைக்க முயன்ற போலீசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. போராட்டக்காரர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசியதில் பல போலீஸ்காரர்கள் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-https://athirvu.in