பொதுக்கூட்ட மசோதாவை ஆட்சேபிக்கும் கூட்டத்துக்கு பாக் சாமாட் தலைமை தாங்குவார்

நாடாளுமன்ற மக்களவை ஏற்றுக் கொண்டு மேலவை ஒப்புதலுக்காக காத்திருக்கும் பொதுக்கூட்ட மசோதாவுக்கு ஆட்சேபம் தெரிவிக்கும் இரண்டாவது சுற்றுக் கூட்டத்துக்கு தேசிய இலக்கியவாதியான ஏ சாமாட் சைட் தலைமை தாங்குவார்.

நாளை கோலாலம்பூரில் உள்ள கேஎல்சிசி பூங்காவில் அந்தக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமையன்று அதே பூங்காவில் பெர்சே இயக்கத்திற்கு ஆதரவாக மஞ்சள் நிற உடை அணிந்திருந்த 400 பேர் ஒன்று கூடி அந்த மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

அவர்கள் “அரசமைப்புக்கு முரணான” அந்த மசோதாவை ஆட்சேபித்து பாடல்களைப் பாடினர். பலூன்களையும் மலர்களையும் விநியோகம் செய்தனர். யோகப் பயிற்சிகளைக் கூட செய்தனர்.

“நாங்கள் இந்த வாரம் மீண்டும் அவ்வாறு செய்வோம். பாக் சாமாட் எங்களுடன் இணைந்து கொண்டு கவிதைகளை வாசிப்பார். போலீஸ் அனுமதி இல்லாமல் நாம் கேஎல்சிசி-யில் ஒன்று கூடுவோம். முட்டாள்தனமான சட்டங்களை நாம் மீறுவோம்”, என அதன் ஏற்பாட்டாளர்களில் ஒருவரான வோங் சின் ஹுவாட் தமது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ளார்.

பாக் சாமாட் என அழைக்கப்படும் அந்த 76 வயது கவிஞரும், நாவலாசிரியருமான அவருக்கு ஆர்ப்பாட்டங்கள் புதிதல்ல. அவர் கடந்த ஜுலை 9ம் தேதி நிகழ்ந்த பெர்சே 2.0 பேரணியை வழி நடத்தியுள்ளார்.

2009ம் ஆண்டு கணித அறிவியல் பாடங்களை ஆங்கிலத்தில் போதிக்கும் கொள்கைக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டம் செய்துள்ளார்.

நாளை பிற்பகல் மணி 2க்கு நிகழும் அந்தப் பேரணிக்கு முகநூல் வழியாக ஏற்பாடு செய்யப்படுகிறது. அந்த பொதுக்கூட்ட மசோதா உடனடியாக மீட்டுக் கொள்ளப்படுவதோடு வெளிநாடுகளில் வாழும் மலேசியர்களுக்கு அஞ்சல் வாக்குகள் அனுமதிக்கப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்வது அந்தப் பேரணியின் நோக்கமாகும்.

நாளைய கூட்டத்துக்கு 800 பேர் வருவர் என ஏற்பாட்டாளர்கள் எதிர்பார்க்கின்றனர். அதில் பங்கு கொள்வதை 300க்கும் மேற்பட்டவர்கள் இணையத்தின் வழி உறுதி செய்துள்ளனர்.

“பிற்பகல் பிக்னிக்” நிகழ்வுக்கு மஞ்சள் நிற உடையை அணிந்திருப்பதோடு உணவுப் பொருட்களுடன் கொடிகளையும் பலூன்களையும் பூக்களையும் கொண்டு வருமாறும் பங்கேற்பாளர்களுக்கு ஏற்பாட்டாளர்கள் ஆலோசனை கூறுகின்றனர்.

பதாதைகள், சுவரொட்டிகள் வேண்டாம்

ஆர்ப்பாட்டத்தின் போது பதாதைகளும் சுவரொட்டிகளும் தேவை இல்லை என ஏற்பாட்டாளர்கள் எண்ணுகின்றனர். அவை இல்லாமல் ஆர்ப்பாட்டம் செய்ய முடியும் என போலீசாருக்குக் காட்டுவது அதன் நோக்கமாகும். அத்துடன் அவற்றைக் கொண்டு வருகின்றவர்கள் பூங்காவுக்குள் அனுமதிக்கப்படாமலும் போகலாம்.

அந்தக் கூட்டம்  அரசியல் சார்பற்றது என்பதால் கட்சிக் கொடிகளையோ டி சட்டைகளையோ கொண்டு வர வேண்டாமென்றும் ஏற்பாட்டாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை அந்தக் குழுவினர் ஆர்ப்பாட்டம் செய்த போது போலீசார் தொலைவிலிருந்து கண்காணித்துக் கொண்டிருந்தனர். ஆனால் பூங்கா பாதுகாவலர்கள் உரைகள் நிகழ்த்தப்படுவதைத் தடுத்தனர்.

என்றாலும் மீண்டும் அடுத்த வாரம் சனிக்கிழமை சந்திப்பதற்கு அப்போது வோங், வாக்குறுதி அளித்தார்.  அங்கிருந்தவர்களும் ஒப்புதல் தெரிவித்தனர்.

அந்த ஆர்ப்பாட்டமும் வழக்குரைஞர் மன்றம் செவ்வாய்க்கிழமை நடத்திய ஊர்வலமும் 2011ம் ஆண்டுக்கான பொதுக் கூட்ட மசோதா நிறைவேற்றப்படுவதை நிறுத்தவில்லை.

மக்களவை அன்றைய தினம் அதனை ஏற்றுக் கொண்டது. அந்த மசோதாவை இனி மேலவை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதற்குப் பின்னர் மாமன்னருடைய ஒப்புதல் கிடைத்ததும் அது சட்டமாகி விடும்.

அது அரசாங்கத் தகவல் ஏட்டில் அறிவிக்கப்பட்டால் பொதுக் கூட்டங்களுக்கான ஏற்பாட்டாளர்கள் முன்கூட்டியே போலீசாருக்கு அதனை தெரிவிக்க வேண்டும். கடுமையான நிபந்தனைகளுக்கு உட்பட்டே அவர்கள் கூட்டத்தை நடத்த முடியும்.

தெரு ஆர்ப்பாட்டங்களுக்கு முற்றாகத் தடை விதிக்கப்பட்டுள்ளதும் அதில் அடங்கும். வழிபாட்டுத் தலங்கள், பள்ளிக்கூடங்கள், பொதுப் போக்குவரத்து முனையங்கள், மற்ற “தடுக்கப்பட்ட பகுதிகள்” ஆகியவற்றுக்கு 50 மீட்டர் சுற்றளவுக்குள் எந்தக் கூட்டமும் நிகழக் கூடாது.