பறவை மோதியதால் தீப்பிடித்து தரையிறங்கிய விமானம்..!

ரஷ்யாவில் 233 பேருடன் புறப்பட்ட விமானத்தின் மீது பறவைகள் கூட்டம் மோதிய நிலையில் விமானி சாதுர்யமாக செயல்பட்டு சோளக் காட்டில் தரையிறக்கியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

உரல் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான (Ural Airlines A321) விமானம் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து கிரிமியா தலைநகர் சிம்ஃபெரோபலுக்கு (Simferopol) புறப்பட்டது. விமானம் மேலே எழுந்த நிலையில் பறவைக் கூட்டம் ஒன்று மோதியுள்ளது.

இதனால் விமானத்தின் ஒரு எஞ்சினில் தீப்பிடித்தது. மற்றொன்று செயலிழந்தது. அப்போது படபடவென்ற சத்தத்துடனும், புகை வந்ததால் பயணிகள் அச்சமடைந்தனர். நிலைமைய உணர்ந்த விமானி, விமானத்தை மீண்டும் தரையிறக்க முடிவு செய்தார்.

என்ஜின்கள் சேதம் அடைந்ததால் வேறு வழியில்லாமல் அங்கிருந்த சோளக்காட்டில் கடும் சிரத்தையுடன் தரை இறக்கினார் விமானி. அப்போது விமானம் தரையில் மோதி சேதம் அடைந்தது.

விமானம் தரையிறங்கிய போது ஏற்பட்ட அதிர்வால் 23 பேர் காயமடைந்தனர். சிலருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. ஒருவர் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது- என்ஜின்கள் இரண்டும் சேதம் அடைந்த நிலையிலும் சாதுர்யமாக செயல்பட்டு 233 பேரின் உயிரை காப்பாற்றிய விமானிகளுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

-https://athirvu.in