போஸ்டர் இல்லாத தேர்தல்- தேர்தல் சீரமைப்புக் குழு பரிந்துரை

தேர்தல்களில் போஸ்டர் அல்லது சுவரொட்டிகளை அடித்து ஒட்டுவது, தொங்க விடுவது போன்றவை வீண் வேலை என்றும் எனவே அடுத்த தேர்தலைச் சுவரோடிகள் இல்லாத ஒன்றாக நடத்த வேண்டும் என்றும் தேர்தல் சீரமைப்புக் குழு(இஆர்சி) பரிந்துரைத்துள்ளது.

இப்பரிந்துரை அரசாங்கத்திடமும் தேர்தல் ஆணையத்திடமும் எடுத்துரைக்கப்படும் என அக்குழுத் தலைவர் அப்துல் ரஷிட் அப்துல் ரஹ்மான் கூறினார்.

“போஸ்டர் சண்டை எல்லைமீறிச் சென்று விடுகிறது. இதை அனுமதிக்கக் கூடாது என்று பரிந்துரைப்போம். சில இடங்களில் விதிவிலக்கு அளிக்கலாம், வேட்பாளர்களை அதிகம் தெரியாத இடங்களில்(கிராமப் புறங்களில்).

“போஸ்டர் போராட்டத்தால் பல பிரச்னைகள், பெரும் செலவுகள். இதைப் பற்றி மேலும் ஆராய்வோம்”, என்றாரவர்.

தேர்தல் முறைகள், தேர்தல் சட்டங்கள் முதலியவற்றை எப்படித் திருத்தி அமைக்கலாம் என்று ஆராய்ந்து பரிந்துரைகள் வழங்க அமைக்கப்பட்ட ஒரு குழுதான் இஆர்சி. 2018 ஆகஸ்டில் அமைக்கப்பட்ட அக்குழு அப்பணியைச் செய்து முடிக்க இரண்டாண்டுகள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.