உலகின் மிகப்பெரிய தீவை விலைக்கு வாங்க விரும்பிய டிரம்ப்

உலகின் மிகப்பெரிய தீவை வாங்குவதற்கு அமெரிக்கா விரும்புவதாக அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியதாக செய்தி வெளியானதை அடுத்து, தாங்கள் “விற்பனைக்கு இல்லை” என்று கிரீன்லாந்து கூறியுள்ளது.

ஆர்க்டிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்களுக்கு இடையில் அமைந்துள்ள, டென்மார்க்கின் தன்னாட்சியுள்ள ஆட்சிப்பகுதியான கிரீன்லாந்தை விலைக்கு வாங்குவது தொடர்பான தனது ஆலோசகர்களுடனான கூட்டத்தின்போது டிரம்ப் விரும்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

ஆனால், கிரீன்லாந்தின் அரசாங்கம் இந்த யோசனைக்கு உடனடியாக மறுப்புத் தெரிவித்துள்ளது: “நாங்கள் வணிகத்திற்காக திறந்திருக்கிறோம், விற்பனைக்கு அல்ல.”

உலகின் மிகப் பெரிய தீவை விலைக்கு வாங்க விரும்பிய டிரம்ப்

அதே போன்று டிரம்பின் விருப்பம் தொடர்பாக பதிலளித்துள்ள கிரீன்லாந்தின் முன்னாள் பிரதர் லார்ஸ் லொக்கே ராஸ்முஸ்ஸென், “இது கண்டிப்பாக ஏப்ரல் மாதம் முதலாம் தேதி செய்யப்படும் நகைச்சுவையாக இருக்க வேண்டும். ஆனால், இது அதற்கான சரியான காலமல்ல,” என்று அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை முதலில் வெளியிட்ட வோல் ஸ்ட்ரீட் ஜர்னல், டிரம்ப் இந்த திட்டம் குறித்து “மாறுபட்ட அளவிலான தீவிரத்தன்மையுடன்” பேசியதாக தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

மற்ற ஊடகங்களில் மேற்கோள் காட்டப்பட்ட ஆதாரங்களின்படி, டிரம்ப் நகைச்சுவையாக கூறினாரா அல்லது அமெரிக்க நிலப்பரப்பை உண்மையிலேயே விரிவுபடுத்துவதில் தீவிரமாக இருக்கிறாரா என்பதில் வேறுபடுகின்றன. -BBC_Tamil