அமெரிக்காவை மீறி இரான் எண்ணெய் கப்பலை விடுவித்த ஜிப்ரால்டர்

அனுமதி இல்லாத பகுதியில் எரிபொருள் கொண்டு சென்றதாக ஒரு மாதமாக தடுத்து வைத்திருந்த இரானிய எண்ணெய் கப்பலை அமெரிக்காவின் வேண்டுகோளை மீறி விடுதலை செய்தது ஜிப்ரால்டர்.

எனினும் அந்த இரானிய எண்ணெய் கப்பலை விடுவிக்க ஜிப்ரால்டர் நீதிமன்றம் ஒன்று நேற்று உத்தரவிட்டதையும் மீறி அக்கப்பலைக் கைப்பற்ற அமெரிக்க நீதித் துறை உத்தரவிட்டுள்ளது.

பிரிட்டன் தன்னாட்சி பகுதியான ஜிப்ரால்டரின் அதிகாரிகளிடம், கப்பலில் உள்ள எரிபொருள் சிரியாவுக்கு செல்லாது என இரான் எழுத்து வடிவில் உறுதியளித்ததை அடுத்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் உத்தரவுக்கு பிரிட்டன் மாற்று ஜிப்ரால்டர் அதிகாரிகள் யாரும் இதுவரை பதிலளிக்கவில்லை

கிரேஸ்-1 எனப்படும் இரான் எண்ணெய் கப்பல் ஜூலை 4 அன்று பிரிட்டன் கடற்படையினரால் நிறுத்தப்பட்டது.

ஒரு சுயாதீன விசாரணை அமைப்பு அமெரிக்காவின் கோரிக்கை குறித்து முடிவு எடுக்கும் என ஜிப்ரால்டரின் முதல்வர் ஃபெபியன் பிகார்டோ கூறியுள்ளார்.

இந்த கப்பல் வியாழக்கிழமை வரை ஜிப்ரால்டரில் இருந்தது. ஆனால் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் பேசிய சிலர், அது 180 டிகிரி வரை நகர்ந்ததாக கூறியிருந்தனர்.

அது கடல் அலையினால் திரும்பியதா இல்லை அங்கிருந்து செல்ல தயார்படுத்தி கொண்டதா என்பது தெரியவில்லை.

இரான், சிரியாவுக்கு கப்பல் செல்லாது என்று கொடுத்த உறுதியின்படி செயல்பட வேண்டும் என்று பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சகம், சிரியா தன்னுடைய சொந்த மக்களுக்கு எதிராக ரசாயன ஆயுதத்தை பயன்படுத்தும் நாடு என கூறியுள்ளது.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள இரானிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜாவித் ஜாரிஃப், இந்த கப்பல் விடுவிக்கப்படுவதை தடுத்து அதை சூறையாடுவதற்கு அமெரிக்கா முயற்சிக்கிறது என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

எப்படி பிடிபட்டது இரானிய கப்பல்

கிரேஸ் 1 கப்பல்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

முன்னதாக, ஜிப்ரால்டர் அரசின் கோரிக்கையின்படி, சுமார் 30 கப்பற்படையினர் பிரிட்டனிலிருந்து ஜிப்ரால்டருக்கு வந்தனர். ஜிப்ரால்டர் அரசு அந்த கப்பல் சிரியாவை நோக்கி செல்கிறது என கூறிய பிறகு கப்பல் நிறுத்தப்பட்டது.

இந்த நிறுத்தம் முதலில் பிரிட்டனுக்கும் இரானுக்கும் நடுவில் சில பிரச்சனையை உருவாக்கியது. ஆனால் இரான் பிரிட்டனின் கப்பல் ஒன்றை நிறுத்திய பிறகு இந்த விவகாரம் மேலும் தீவிரமானது.

கடந்த வாரம், ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் வர்த்தக கப்பல்களை பாதுகாக்கும் அமெரிக்கா தலைமையிலான படையுடன் இணையப் போவாதாக பிரிட்டன் அறிவித்தது.

கிட்டதட்ட ஐந்தில் ஒரு மடங்கு உலக எண்ணெய் போக்குவரத்து இந்த நீரிணை வழியாகத்தான் செல்கிறது. இந்த நீரிணை இரானின் தெற்கு கடற்கரையில் அமைந்துள்ளது.

பிரிட்டன் கப்பலின் நிலை

ஸ்டெனா இம்பெரோபடத்தின் காப்புரிமைAFP

பிரிட்டன் கொடியுடன் இருந்தாலும் சுவீடனுக்கு சொந்தமான ஸ்டெனா இம்பரோ கப்பல் இரானில் உள்ள பாந்தர் அப்பாஸ் துறைமுகத்தில், சிறைபிடிக்கப்பட்ட 27 நாட்களுக்கு பிறகு நிலைநிறுத்தப்பட்டது.

அந்தக் கப்பல் சர்வதேச கடல் விதிகளை மீறியதாக இரான் கூறினாலும், இது அரசே ஈடுபடும் கடல் கொள்ளை என்று பிரிட்டன் கூறியது.

கடந்த மாதம் ஸ்டெனா இம்பரோ கப்பலில் இருப்பவர்களின் புகைப்படங்களை வெளியிடப்பட்டது. அதில் சிலர் சமைக்கவும், சிலர் இரானிய அதிகாரிகளிடம் பேசுவது போலும் இருந்தது.

இந்த குழுவில் 23 பேர் இந்தியர்கள். மற்றவர்கள் ரஷ்யா, லட்டிவா மற்றும் ஃபிலிப்பைன்ஸை சேர்ந்தவர்கள்.

கிரேஸ்-1 கப்பலில் இருந்தவர்களில் 28 பேர் இந்தியர்கள் எனக் கூறப்படுகிறது.

அமெரிக்காவுக்கும் இரானுக்குமான உறவு

அணுஆயுதங்களை தயாரிப்பதாக அமெரிக்கா இரான் மீது குற்றம் சுமத்துகிறது. ஆனால் இதை இரான் தொடர்ந்து மறுக்கிறது. அதுமட்டுமல்லாமல் இரான் மத்திய கிழக்கு பகுதியை சீர்குலைப்பதாக குற்றம் சாட்டுகிறது அமெரிக்கா.

இருப்பினும், இரான் அமெரிக்காவுடனான அணுஆயுத உடன்படிக்கையை மீறவில்லை என்று பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் தெரிவித்திருந்தன.

இதைத்தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் இரான் இடையே கப்பல்களை சேதப்படுத்துவது தொடர்பாக ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டுவதும், மறுப்புத் தெரிவிப்பதும் தொடர்கதையாகி வருகிறது.

-BBC_Tamil