233 பேரின் உயிரை காத்த விமானிக்கு காத்திருந்த இன்பதிர்ச்சி!

ரஷ்யாவில், விமானத்தை சோளக்காட்டில் தரையிறக்கி அதிலிருந்த 233 பேரை பத்திரமாக மீட்ட விமானி மற்றும் துணை விமானிக்கு அந்நாட்டின் உயரிய விருதினை அதிபர் விளாடிமிர் புதின் வழங்கினார்.

அண்மையில், மாஸ்கோ அருகிலுள்ள சுகோவ்ஸ்கி விமான நிலையத்திலிருந்து கிரிமியாவில் உள்ள சிம்பெரோபோல் நோக்கி புறப்பட்டு சென்ற யுரால் ஏர்லைன்ஸ்-ன் ஏர்பஸ் ஏ321 விமானம் மேலெழும்பிய இரு நிமிடத்திலேயே, பறவைகள் கூட்டம் மோதி அதன் இன்ஜின்கள் இரண்டும் அடுத்தடுத்து கோளாறானது.

இதனைத்தொடர்ந்து விமானத்திலிருந்து புகை வெளியேற தொடங்கவே, விமானி டமிர் யுசுபோவ், துணை விமானி உதவியுடன் சாதுர்யமாக செயல்பட்டு விமானத்தை சோளக்காட்டில் பத்திரமாக தரையிறக்கினார்.

இதில் விமானத்தில் பயணித்த சிறுவர்கள் உட்பட 70 பேர் லேசான காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், விமானத்திலிருந்த 7 விமான ஊழியர்கள் மற்றும் 226 பயணிகளின் உயிரை காத்த விமானியை பலரும் ரஷ்யாவின் ஹீரோ என பாராட்டினர், இருப்பினும் அவர் அதனை தன்னடக்கத்துடன் தவிர்த்தார்.

இந்நிலையில், இன்ஜின் பழுதான விமானத்தை தீரத்துடன், செயல்பட்டு சோளாக்காட்டில் தரையிறக்கி விபத்தை தவிர்த்த விமானி டமிர் யுசுபோவ் மற்றும் துணை விமானி ஜார்ஜி முர்சின் ஆகியோருக்கு ‘த ஹூரோ ஆப் ரஷ்யா’என்ற நாட்டின் உயரிய விருதினை அதிபர் விளாடிமிர் புதின் வழங்கி பாராட்டினார்.

மேலும் அவர்களுடன் பயணித்த விமான குழுவினர் 5 பேருக்கும் ‘ஆர்டர் ஆப் கரேஜ்’ என்ற விருதினை வழங்கி புதின் கவுரவித்தார்.

-athirvu.in