ஆப்கானிஸ்தானில் திருமண நிகழ்வில் குண்டுவெடிப்பு – 63 பேர் பலி

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஒரு திருமண நிகழ்வில் நடந்த குண்டுவெடிப்பில் குறைந்தது 63 பேர் கொல்லப்பட்டனர். 180க்கும் மேலானவர்கள் காயமடைந்துள்ளனர்.

சமூக ஊடகங்களில் பரவும் படங்களில் திருமண அரங்கம் முழுதும் சிதறிய உடல்கள் கிடப்பதைக் காண முடிகிறது.

இறந்தவர்களின் எண்ணிக்கையை குண்டுவெடிப்பு நடந்து சில மணி நேரங்களுக்குப் பின்னர் ஆப்கானிஸ்தான் உள்நாட்டு விவகாரங்களுக்கான அமைச்சகம் தெரிவிக்கிறது.

திருமண நிகழ்வின்போது தற்கொலை குண்டுதாரி குண்டுகளை வெடிக்கச் செய்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

உள்ளூர் நேரப்படி நேற்று இரவு 10:40 மணிக்கு இந்த நிகழ்வு நடந்துள்ளது.

Afghanistan Bombபடத்தின் காப்புரிமைEPA

இந்த சம்பவத்துக்குத் தாங்கள் காரணமல்ல என் தாலிபன் அமைப்பு கூறியுள்ளது. யாரும் இதுவரை பொறுப்பேற்கவும் இல்லை.

தொடரும் தாக்குதல்கள்

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் உள்ள ஷியா பிரிவைச் சேர்ந்த ஹசாரா சிறுபான்மை இன மக்களை தாலிபன் மற்றும் இஸ்லாமிய அரசு அமைப்பின் தீவிரவாதிகள் தொடர்ந்து இலக்கு வைத்துத் தாக்கி வருகின்றனர்.

10 நாட்களுக்கு முன் காபூலில் காவல் நிலையம் ஒன்றின் முன்பு நடந்த குண்டுவெடிப்புக்கு தாலிபன் பொறுப்பேற்றது. அதில் 14 பேர் இறந்தனர்; 150 பேர் காயமடைந்தனர்.

பாகிஸ்தானில் உள்ள குவெட்டா நகரில் தாலிபன் முன்னணி தலைவர் ஹிபதுல்லா அகுன்ட்சாதாவின் சகோதரர், வெள்ளியன்று கொல்லப்பட்டார்.

ஹிபதுல்லா அங்கு ஒரு மசூதியில் தொழுகை செய்ய இருந்ததாகவும் அவரை இலக்கு வைத்து அப்போது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்றும் ஆப்கானிஸ்தான் உளவு வட்டாரங்கள் பிபிசியிடம் தெரிவித்தார்.

ஆயிரக்கணக்கான படைகளை ஆப்கானிஸ்தானில் நிலைநிறுத்தியுள்ள அமெரிக்கா உடன் அமைதி உடன்படிக்கை செய்துகொள்ள நெருக்கம் காட்டி வந்தாலும் , அங்கு பதற்றம் தொடர்ந்து வருகிறது.

-BBC_Tamil