இரான் கப்பல் சர்ச்சை – தடுத்து வைக்கப்பட்ட கப்பல் ஜிப்ரால்டரை விட்டு கிளம்பியது

கடந்த ஜூலை மாதத்தில் சிரியாவுக்கு எண்ணெய் கொண்டு சென்றதாக தடுத்து வைக்கப்பட்டிருந்த இரான் நாட்டு எண்ணெய் கப்பலை ஜிப்ரால்டர் விடுவித்ததையடுத்து அந்த கப்பல் துறைமுகத்தை விட்டு கிளம்பியது.

மத்திய தரைக்கடலின் கிழக்கு பகுதியில் அந்த கப்பல் சென்று கொண்டிருப்பதாக கடல் கண்காணிப்பு கருவிகள் வெளியிடும் படங்கள் காண்பித்துள்ளன.

கிரேஸ்-1 என்ற பெயரில் இருந்து அட்ரியன் டார்யா-1 என பெயர் மாற்றப்பட்ட அந்த கப்பலை மீண்டும் பிடித்து வைக்குமாறு அமெரிக்கா விடுத்த கோரிக்கையை முன்னதாக ஜிப்ரால்டர் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

தான் தடுத்து வைத்திருந்த எண்ணெய் கப்பலை விடுவிக்கும் முடிவை ஜிப்ரால்டர் எடுத்ததை தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமையன்று தனது கடைசி நிமிட கோரிக்கையை அமெரிக்கா முன்வைத்தது.

தான் விடுவித்த கப்பல் தங்கள் நாட்டு துறைமுகத்தை விட்டு கிளம்பியது குறித்த தகவலை இன்னமும் உறுதிபடுத்தாத ஜிப்ரால்டர், இரான் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார மற்றும் பிற தடைகள் ஐரோப்பிய ஒன்றிய விதிகளின்படி பொருந்தாது என்பதால், தன்னால் அமெரிக்காவின் புதிய ஆணையை ஏற்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளது.

அனுமதி இல்லாத பகுதியில் எண்ணெய் கொண்டு சென்றதாக ஒரு மாதமாக தடுத்து வைத்திருந்த இரானிய எண்ணெய் கப்பலை அமெரிக்காவின் வேண்டுகோளை மீறி சனிக்கிழமையன்று விடுதலை செய்தது ஜிப்ரால்டர்.

பிரிட்டன் தன்னாட்சி பகுதியான ஜிப்ரால்டரின் அதிகாரிகளிடம், கப்பலில் உள்ள எரிபொருள் சிரியாவுக்கு செல்லாது என இரான் எழுத்து வடிவில் உறுதியளித்ததை அடுத்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இரான் கப்பல் சர்ச்சைபடத்தின் காப்புரிமைEPA

கிரேஸ்-1 எனப்படும் இரான் எண்ணெய் கப்பல், ஜூலை 4 அன்று பிரிட்டன் கடற்படையினரால் நிறுத்தப்பட்டது.

இந்த கப்பல் வியாழக்கிழமை வரை ஜிப்ரால்டரில் இருந்தது. ஆனால் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் பேசிய சிலர், அது 180 டிகிரி வரை நகர்ந்ததாக கூறியிருந்தனர்.

அது கடல் அலையினால் திரும்பியதா இல்லை அங்கிருந்து செல்ல தயார்படுத்தி கொண்டதா என்பது தெரியவில்லை.

எப்படி பிடிபட்டது இரானிய கப்பல்?

முன்னதாக, ஜிப்ரால்டர் அரசின் கோரிக்கையின்படி, சுமார் 30 கப்பற்படையினர் பிரிட்டனிலிருந்து ஜிப்ரால்டருக்கு வந்தனர். ஜிப்ரால்டர் அரசு அந்த கப்பல் சிரியாவை நோக்கி செல்கிறது என கூறிய பிறகு கப்பல் நிறுத்தப்பட்டது.

இந்த நிறுத்தம் முதலில் பிரிட்டனுக்கும் இரானுக்கும் நடுவில் சில பிரச்சனையை உருவாக்கியது. ஆனால் இரான் பிரிட்டனின் கப்பல் ஒன்றை நிறுத்திய பிறகு இந்த விவகாரம் மேலும் தீவிரமானது.

கடந்த வாரம், ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் வர்த்தக கப்பல்களை பாதுகாக்கும் அமெரிக்கா தலைமையிலான படையுடன் இணையப் போவாதாக பிரிட்டன் அறிவித்தது.

தடுத்து வைக்கப்பட்ட கப்பல் ஜிப்ரால்டரை விட்டு கிளம்பியதுபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

கிட்டதட்ட ஐந்தில் ஒரு மடங்கு உலக எண்ணெய் போக்குவரத்து இந்த நீரிணை வழியாகத்தான் செல்கிறது. இந்த நீரிணை இரானின் தெற்கு கடற்கரையில் அமைந்துள்ளது.

கடந்த மாதம் ஸ்டெனா இம்பரோ கப்பலில் இருப்பவர்களின் புகைப்படங்களை வெளியிடப்பட்டது. அதில் சிலர் சமைக்கவும், சிலர் இரானிய அதிகாரிகளிடம் பேசுவது போலும் இருந்தது.

இந்த குழுவில் 23 பேர் இந்தியர்கள். மற்றவர்கள் ரஷ்யா, லட்டிவா மற்றும் ஃபிலிப்பைன்ஸை சேர்ந்தவர்கள்.

கிரேஸ்-1 கப்பலில் இருந்தவர்களில் 28 பேர் இந்தியர்கள் என கூறப்படுகிறது.

அமெரிக்காவுக்கும் இரானுக்குமான உறவு

பிரிட்டன் கப்பலின் நிலைபடத்தின் காப்புரிமைAFP

அணுஆயுதங்களை தயாரிப்பதாக அமெரிக்கா இரான் மீது குற்றம் சுமத்துகிறது. ஆனால் இதை இரான் தொடர்ந்து மறுக்கிறது. அதுமட்டுமல்லாமல் இரான் மத்திய கிழக்கு பகுதியை சீர்குலைப்பதாக குற்றம் சாட்டுகிறது அமெரிக்கா.

இருப்பினும், இரான் அமெரிக்காவுடனான அணுஆயுத உடன்படிக்கையை மீறவில்லை என்று பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் தெரிவித்திருந்தன.

இதைத்தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் இரான் இடையே கப்பல்களை சேதப்படுத்துவது தொடர்பாக ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டுவதும், மறுப்புத் தெரிவிப்பதும் தொடர்கதையாகி வருகிறது.

-BBC_Tamil