பிரான்சில் நடைபெறும் ஜி7 மாநாடுகளின் இடையே பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யத் தயார் என்று மீண்டும் தெரிவித்துள்ளார்.
ஜி 7 நாடுகளின் மாநாடு பிரான்ஸ் நாட்டின் பியாரிட்ஸ் நகரில் வரும் சனிக்கிழமை தொடங்குகிறது. கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய ஏழு உறுப்பு நாடுகளும் இந்த ஆண்டு பொருளாதாரம், வெளியுறவு கொள்கை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகளை விவாதிக்க உள்ளன.
ஐரோப்பிய கவுன்சில் தலைவர் டொனால்ட் டஸ்க் மாநாட்டில் பங்கேற்க உள்ளார்.இந்த மாநாட்டிற்கு நட்பு நாடுகளான இந்தியா, ஆஸ்திரேலியா, சிலி, தென் ஆப்பிரிக்கா, உள்ளிட்ட நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதில் பங்கேற்க உள்ள பிரதமர் மோடியை அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திக்க திட்டமிட்டுள்ளார். டிரம்பிடம் தொலைபேசியில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் காஷ்மீர் பிரச்சினையில் தலையிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆனால் மூன்றாம் நாடு தலையிட இடமில்லை என்று இந்தியா திட்டவட்டமாக அறிவித்துள்ள நிலையில் இப்பிரச்சினையை இந்தியாவும் பாகிஸ்தானும் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது. ஆனால், மீண்டும் இந்தியா-பாகிஸ்தான் விவகாரத்தில் தலையிட்டு சமரசம் செய்ய விரும்புவதாக அதிபர் டிரம்ப் நேற்று பத்திரிகை ஒன்றின் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் பிரச்சினை மிகவும் சிக்கலானது என்றும் நீண்ட காலமாகவே இந்து-முஸ்லீம் பிரச்சினை இந்தியாவில் இருப்பதாகவும் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இருவரிடமும் தாம் தொலைபேசியில் பேசியதாகவும் இருவரும் சிறந்த மனிதர்கள், தமக்கு நல்ல நண்பர்கள் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
-https://athirvu.in