தேர்தல் ஆணையம் (இசி) வாக்களிப்பின்போது அழியா மையைப் பயன்படுத்த ஆயத்தமாக உள்ளது. அதற்குமுன் தேசிய ஃபாட்வா மன்றத்தின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது.
“இசி செயலாளர் கமருடின் அஹ்மட் பாரியா, அவர்கள் தயாராக இருப்பதாகவும் தேசிய ஃபாட்வா மன்றத்தின் இறுதி ஒப்புதலுக்காகக் காத்திருப்பதாகவும் கூறினார். மன்றம் மையில் பயன்படுத்தப்படும் பொருள்கள் ஷியாரியா சட்டத்துடன் ஒத்துப்போவதை உறுதிப்படுத்திக்கொள்ள விரும்புகிறது.” செகாம்புட் எம்பி லிம் லிப் எங், இன்று டிஏபி எம்பிகள் கமருடினைப் புத்ரா ஜெயாவில் சந்தித்த பின்னர் அதனைக் கூறினார்.
இந்த மை ஹலால் பொருள்களைத்தான் கொண்டிருக்கிறதா, அது முஸ்லிம்கள் தொழுகைக்குமுன் தங்களைச் சுத்தப்படுத்திக்கொள்ளுதலுக்கு இடையூறாக இருக்குமா போன்ற கேள்விகளும் எழுப்பப்பட்டுள்ளன.
அந்தச் சந்திப்பு ஒரு மணி நேரம் நீடித்ததாகக் கூறிய இன்னொரு டிஏபி எம்பியான தெரெசா கொக், வெளிநாட்டில் வசிக்கும் மலேசியர்களை வாக்களிக்க அனுமதிக்கும் விவகாரத்தை ஆணையம் இன்னமும் ஆராய்ந்து வருவதாகக் கூறினார். எனவே, அது விரைவில் அமல்படுத்தப்படாது என்றே தோன்றுகிறது என்றாரவர்.
வெளிநாட்டில் வசிக்கும் மலேசியருக்கு வாக்களிக்கும் உரிமை வழங்குவது, அழியா மையைப் பயன்படுத்துவது ஆகியவை தேர்தல் சீரமைப்புமீதான நாடாளுமன்றத் தேர்வுக் குழு(பிஎஸ்சி) நேற்று மக்களவையில் தாக்கல் செய்து மக்களவையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பத்து பரிந்துரைகளில் அடங்கியுள்ளன.
அவற்றை எப்போது அமல்படுதலாம் என்பதற்கான கால அட்டவணையையும் அவற்றை அமல்படுத்துவதில் எதிர்ப்படக்கூடிய இடர்களையும் விளக்குவதற்கு அந்தப் பரிந்துரைகளை அமலாக்கும் பொறுப்பைக் கொண்ட இசி முதலிய அமைப்புகளுக்கு இன்று தொடங்கி இரண்டு வாரம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
நேற்று பிஎஸ்சி அறிக்கை மீதான விவாதத்தின்போது பாசிர் மாஸ் சுயேச்சை எம்பி, இப்ராகிம் அலி அழியா மை உடலில் நிரந்தமாக தங்கி முஸ்லிம்கள் தொழுகை செய்வதற்கு இடையூறாக அமையலாம் என்று கவலை தெரிவித்தார்.
அந்த மை 24 மணி நேரம் உடலில் இருக்கும் என்பதால் முஸ்லிம்கள் தொழுகைக்குமுன் நீரைப் பயன்படுத்தி கைகளைச் சுத்தப்படுத்தும்போது விரலில் மை இருந்தால் நீர் மையை ஊடுருவிச்சென்று விரலைச் சுத்தப்படுத்த முடியாமல் போகலாம் என்றாரவர்.