அமேசான் காட்டுத்தீ: 2500 கி.மீ கடந்து வந்து இருளை உண்டாக்கிய புகை

தென் அமெரிக்காவின் மிக பெரிய நகரான சான் பௌலோவில் இந்த ஆண்டு ஆகஸ்ட் 19ம் தேதி வானிலை அறிவிப்பில், சூரியன் மறையும் நேரம் மாலை 5.51 என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், இரண்டு மணிநேரத்திற்கு முன்பாகவே அங்கு இருள் சூழ்ந்துவிட்டது.

தென் துருவத்தில் நிலவிய குளிரான வானிலையும், அமேசான் மழைக்காடுகளில் உருவான காட்டு தீயால் எழுந்த புகையும் சேர்ந்து இத்தகைய நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது,

சான் பௌலோ நகரின் வடக்கே 2,500 கிலோமீட்டர் தொலைவில் தீ ஏற்பட்டதால் எழுந்த புகை, இங்கு வந்ததால்தான் இந்த நகரில் குறிப்பிடப்பட்ட நேரத்திற்கு முன்னதாகவே இருள் சூழ்ந்துவிட்டதாக நம்பப்படுகிறது.

அதிகரிக்கும் அழிவு

அமேசானில் காட்டுத்தீ சம்பவங்கள் அதிகரித்துள்ளன என்று பிரேசிலிய சுற்றுச்சூழல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விவசாயத்திற்கு நிலத்தை பயன்படுத்துவதற்காக சில வேளைகளில் இந்த காட்டுத்தீக்கு மக்களே காரணமாகி விடுகின்றனர்.

தேசிய விண்வெளி ஆய்வு நிலையத்தால் ஆய்வு செய்யப்பட்ட செயற்கைக்கோள் படங்களில் ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரை 72, 800 தீ உருவாகிய இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை 2018ம் ஆண்டைவிட அதிகமாகும்.

நாசா படங்கள்படத்தின் காப்புரிமைNASA
Image captionஆகஸ்ட் 13ம் தேதி பிரேசிலிய மாநிலங்களான ரொண்டோனியா, அமேசானாஸ், பாரா மற்றும் மேட்டோ க்ரோசோ ஆகியவற்றில் அமேசான் காட்டுத்தீ சம்பவங்களை, நாசா ஆக்குவா செயற்கைக்கோளின் இந்த புகைப்படம் காட்டுகிறது.

சான் பௌலோவுக்கு கனமான மேகங்களை தாழ்வாக கொண்டு வந்த குளிர் காலநிலையோடு இந்த புகையும் கலந்துவிட்டது.

“மேல் நோக்கி செல்வதற்கு பதிலாக, வளிமண்டலத்தின் கீழேயே புகை சுமார் இரண்டு கிலோமீட்டர் உயரத்தில் தங்கிவிடுகிறது” என்று வானியல் ஆய்வாளர் மார்செலோ செலுட்டி பிபிசியிடம் தெரிவித்தார்.

இன்னொரு வானியல் ஆய்வாளர் ஜோஸிலியா பிகோரிம் கருத்து தெரிவிக்கையில், பிரேசிலிய மாநிலங்களான ரொண்டோனியா மற்றும் ஏக்கரில் இருந்தும், பக்கத்திலுள்ள பொலிவியா மற்றும் பராகுவேயிலும் நிகழ்ந்த பெரிய தீ சம்பவங்களால் புகை தென் பகுதிக்கு செல்வதை செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன,” என்று கூறினார்.

அமேசான் காடு அழிப்பை பிரேசிலிய அரசு எவ்வாறு கையாண்டாது என்று கேள்விகள் எழுந்துள்ள நிலையில், சான் பௌலோவில் இருள் முன்னதாகவே சூழும் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, 2018ம் ஆண்டு 7,500 சதுர கிலோமீட்டர் காட்டு பகுதி அழிக்கப்பட்டுள்ளது. இது, 2017ம் ஆண்டு அழிக்கப்பட்டதைவிட 65 சதவீதம் அதிகமாகும்.

2019ம் ஆண்டு ஜனவரி மாதம் அதிபர் சயீர் போல்சனாரு பதவியேற்ற பின்னர், அமேசானில் காடு அழிப்பு மூன்று மடங்காகியுள்ளது என்று புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

கடந்த மாதம் மட்டும் 2,200 சதுர கிலோமீட்டர் நிலத்தில் காடு அழிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் இருந்ததைவிட இது 280 சதவீதம் அதிகமாகும்.

இந்த புள்ளிவிவரத்திற்கு எதிராக அதிபர் போல்சனாரு பொதுவெளியில் கேள்வி எழுப்பியதோடு, இதனை வெளியிட்ட நிறுவனத்தின் இயக்குநர் ரிக்கார்டோ கால்வாவ்-வை கடந்த மாதம் பதவியில் இருந்து அகற்றியதால் மேலும் சர்ச்சையை உருவாக்கியுள்ளார்.

நான் புரிந்து கொள்வதுபடி, இந்த புள்ளவிவரங்கள் அரசுக்கும், பிரேசிலுக்கும் எதிரான உள்நோக்கத்தோடு புனையப்பட்டுள்ளதாக தோன்றுகிறது” என்று ஆகஸ்ட் முதலாம் நாள் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அதிபர் போல்சனாரு தெரிவித்தார்.

“அமேசான் எங்களுடையது” என்று மீண்டும் மீண்டும் ஊடகங்களிடம் அவர் கூறினார்.

சர்வதேச சச்சரவு

கடந்த சில நாட்களுக்கு முன்னர், பிரேசிலின் அமேசான் நிதியத்திற்கு வழங்கி வந்த நிதியை ஜெர்மனியும், நார்வேயும் நிறுத்திவிட்டன. இந்த நிதி, காடு அழிப்பை தடுப்பதற்கு உதவும் சர்வதேச முயற்சியின் முக்கிய அம்சமாக இருந்துவந்தது.

அதிபர் சயீர் போல்சனாரு பதவியேற்ற பின்னர், அமேசானில் காடு அழிப்பு அதிகரித்துள்ளது.படத்தின் காப்புரிமைGETTY IMAGES
Image captionஅதிபர் சயீர் போல்சனாரு பதவியேற்ற பின்னர், அமேசானில் காடு அழிப்பு அதிகரித்துள்ளது.

கடந்த பத்து ஆண்டுகளில் 1.2 பில்லியன் டாலருக்கு அதிகமாக வழங்கி, மிக பெரிய நன்கொடையாளராக நார்வே இருந்து வந்தது.

“பொருத்தமான வழிமுறையில் இந்த நாடுகள் இந்த நிதியை பயன்படுத்தி கொள்ளலாம். பிரேசிலுக்கு இது வேண்டாம்,” என்று போல்சனாரு பதிலளித்துள்ளார்.

சுமார் 60 சதவீத அமேசான் காட்டுப்பகுதி பிரேசிலில் உள்ளது. அதிக கார்பனை உள்வாங்கிக் கொள்ளும் காட்டை பாதுகாப்பது, பருவநிலை மாற்றத்தை தடுக்கும் முயற்சிகளில் மிகவும் முக்கியமானது” என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

1988ம் ஆண்டு நாட்டின் அரசியல் சாசனத்தால் தற்போது தடை செய்யப்பட்டுள்ள பழங்குடியின இடஒதுக்கீடு உள்பட இந்த பிரதேசத்தின் மூலவளங்களை பயன்படுத்தி கொள்வது தொடர்பாக அதிபர் போல்சனாரு வெளிப்படையாக பேசியுள்ளார்.

கடந்த ஆண்டு தேர்தல் பரப்புரையில், சுரங்க அகழ்வுக்கு உதவவும், விவசாய வர்த்தக நிறுவனங்கள் அவற்றின் செயல்பாடுகளை அமேசான் உள்பட சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விரிவாக்கவும் சட்டமியேற்றப்படும் என அவர் வாக்குறுதி அளித்துள்ளார்.

காட்டுத்தீபடத்தின் காப்புரிமைGETTY IMAGES
Image captionஇந்த ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை அமேசானில் 72 ஆயிரம் காட்டுத்தீ சம்பவங்களை பிரேசிலின் கண்காணிப்பு முகமையான ‘இன்பே’ தெரிவித்துள்ளது.

காடுகளை அழிக்க உரிமம்

பிரேசிலின் முக்கிய சுற்றுச்சூழல் முகமையான இபாமாவின் பட்ஜெட்டை குறைப்பது போன்ற நிலைப்பாட்டிற்காகவும், முடிவுகளுக்காகவும் முன்னாள் படை அதிகாரியை “கேப்டன் செயின்சா” என்ற புனைப்பெயரில் சுற்றுச்சூழலியல் வல்லுநர்கள் அழைக்கின்றனர்.

“இது ஏறக்குறைய சட்டத்திற்கு விரோதமாகவும், தண்டனையோடும் காடு அழிப்பதற்கு வழங்கப்படும் உரிமம்” என்று கிரீன்பீஸ் செய்தி தொடர்பாளர் கடந்த வாரம் தெரிவித்துள்ளார்.

பழங்குடியின பிரதேசங்களுக்கான பொறுப்பை நீதி அமைச்சகத்தில் இருந்து வேளாண்மை அமைச்சகத்திற்கு மாற்றுவதற்கு போல்சனாரு எடுத்த முயற்சியும் விமர்சனங்களை எதிர்கொண்டது.

“கோழிகளை பாதுகாக்க, நரியிடம் பொறுப்பை ஒப்படைக்க அரசு முயல்கிறது” என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். -BBC_Tamil