ஆப்ரிக்காவை சேர்ந்த குட்டி யானைகளை அவற்றின் இயற்கையான வன சூழலில் இருந்து பிரித்து உயிரியல் பூங்காக்களுக்கு விற்பனை செய்வதை ஏறக்குறைய முழுமையாக தடை செய்யும் தீர்மானத்துக்கு ஜெனீவாவில் நடந்த கூட்டத்தில் ஒப்புதல் கிடைத்துள்ளது.
அருகி வரும் உயிரினங்களை வைத்து சர்வதேச அளவில் நடக்கும் வர்த்தகம் குறித்த இந்த மாநாட்டின் உறுப்பு நாடுகள் மற்றும் அமைப்புகள் பல நாட்கள் நடந்த விவாதத்திற்குப் பிறகு இது குறித்த விதிகளை கடுமையாக்க முடிவு செய்தன.
குட்டி யானை விற்பனைக்கு தடை விதிக்கும் இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 87 வாக்குகளும், எதிராக 29 வாக்குகளும் பதிவாகின.
ஆனால், குட்டி யானை ஏற்றுமதியில் முன்னணியில் உள்ள ஜிம்பாப்வே இந்த தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்து. அதேபோல் அமெரிக்காவும் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தது என்பது குறிப்பிடதக்கது.
- ‘விளையாடுங்கள், வேட்டையாடாதீர்கள்’ – யானை குறித்து 11 சுவாரஸ்ய தகவல்கள்
- இந்தியா – பாகிஸ்தான் பிரிவினை: பொன் ஆரம் முதல் யானை வரை தப்பவில்லை!
மற்ற ஆப்ரிக்க நாடுகளை காட்டிலும் ஜிம்பாப்வே மற்றும் போட்ஸ்வானா ஆகிய இரு நாடுகளிலும் யானைகளின் எண்ணிகை கணிசமான அளவில் உள்ளது.
மேலும் இந்த இரு நாடுகளுக்கும் ”பொருத்தமான மற்றும் ஏற்றுக்கொள்ளும் வகையில்” உள்ள இடங்களுக்கு யானைகளை ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
யானைகள் விற்பனை குறித்து உலக அளவில் கவலை தெரிவிக்கப்பட்டு வரும் இவ்வேளையில், செவ்வாய்க்கிழமையன்று எடுக்கப்பட்ட முடிவு யானை விற்பனை குறித்த தடையில் முக்கிய பங்கு வகிக்கும் என்று கருதப்படுகிறது. -BBC_Tamil