தாலிபன் தீவிரவாதிகளுடன் “கொள்கை அளவில்” எட்டப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, அமெரிக்கா அடுத்த 20 வாரங்களுக்குள் ஆப்கானிஸ்தானில் இருந்து தனது 5,400 துருப்புக்களை திரும்பப் பெறும் என்று வாஷிங்டனின் உயர்மட்ட பேச்சுவார்த்தையாளர் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் நல்லிணக்கத்திற்கான அமெரிக்காவின் சிறப்பு பிரதிநிதியான சல்மே கலீல்சாத், ஆப்கானிஸ்தான் அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த ஒப்பந்தம் குறித்த அறிவிப்பை தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் முதல் முறையாக வெளியிட்டார்.
இருப்பினும், இதுகுறித்த இறுதி முடிவை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பே எடுப்பார் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த நேர்காணல் ஒளிபரப்பாகிக்கொண்டு இருக்கும்போதே காபூலில் பயங்கர குண்டுவெடுப்பு நிகழ்ந்தது.
இந்நிலையில், வெளிநாட்டு படையினரை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுக்கொள்வதாக தாலிபன்கள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலில் குறைந்தது ஐந்து பொது மக்கள் உயிரிழந்ததுடன், பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். -BBC_Tamil