திரிபோலி கிளர்ச்சிக்காரர்கள் வசம்; கடாஃபியின் மகன்கள் கைது!

லிபியாவின் தலைநகர் திரிபோலிக்குள் கிளர்ச்சிப் படைகள் நேற்றிரவு நுழைந்ததை அடுத்து அந்நகரின் பல இடங்களில் தற்போதும் சண்டை நீடித்துக்கொண்டிருக்கிறது.

மோதல் முன்னரங்கு என்பது நகரின் பல பாகங்களிலும் காணப்படுகிறது என்றாலும், தலைநகரின் பெரும்பகுதி தற்போது தமது கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதாக கிளர்ச்சிக்காரர்கள் கூறுகின்றனர்.

நூற்றுக்கணக்கான கிளர்ச்சிப் படையினர் ஆயுதங்களை ஏந்தியபடி ஊர்திகளில் நகரத்தின் மையத்தில் உள்ள பச்சை சதுக்கத்துக்கு சென்றுகொண்டிருக்கிறார்கள் என்று அங்குள்ள ‘ராய்டர்’ செய்தி நிறுவன முகவர் ஒருவர் கூறுகிறார்.

தலைநகருக்குள் வரும் கிளர்ச்சிப் படையினரை வரவேற்கும் முகமாக இச்சதுக்கத்தில் நேற்றிரவு திரிபோலி நகரவாசிகள் ஆயிரக்கணக்கானோர் கூடி ஆர்ப்பரித்திருந்தனர்.

தமது போராளிகள் சுய கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், பழிவாங்கும் எண்ணத்தில் செயல்படக் கூடாது என்று கிளர்ச்சித் தலைவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதனிடையே, கர்ணல் கடாஃபியின் மகனும், கடாஃபிக்கு பின்னர் ஆட்சிப் பொறுப்புக்கு வரக்கூடிய நிலையில் இருந்தவருமான சயிஃப் அல் இஸ்லாம் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை சட்ட நடவடிக்கை அதிகாரி உறுதிசெய்துள்ளார். கடாஃபியின் மற்றொரு மகனான முகம்மதும் கிளர்ச்சிக்காரர்களினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கடாஃபியின் இவ்விரு மகன்களையும் திரிபோலியில் உள்ள தேசிய இடைக்கால நிர்வாக சபையிடம் கையளித்துள்ளதாகவும், இவர்கள் இருவரும் அங்கிருந்து பென்காஸிக்கு கொண்டுசெல்லப்படலாம் என்றும் கிளர்ச்சித் தரப்பு தொலைக்காட்சி ஒன்று தெரிவித்துள்ளது.

கடாஃபியின் சர்வதிகார ஆட்சி இன்னும் சில மணிநேரங்களில் முடிவுக்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படும் அதேவேளை கர்ணல் கடாஃபி லிபியாவை விட்டு வெளியேற உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.