அமெரிக்க அதிபர் டிரம்ப் தாலிபன்கள் உடனான சந்திப்பை ரத்து செய்தார்

தாலிபன் அமைப்பினர் உடன் மேற்கொள்ளப்பட இருந்த அமைதி உடன்படிக்கை ரத்து செய்யப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இன்று, ஞாயிறுக்கிழமை, கேம்ப் டேவிட்டில் தாலிபன் தலைவர்களை சந்திக்க இருந்தார் டிரம்ப். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஒரு அமெரிக்க ராணுவ வீரர் கொல்லப்பட்ட தாக்குதலுக்கு தாலிபன் பொறுப்பேற்ற பிறகு, திட்டமிடப்பட்டிருந்த சந்திப்பை ரத்து செய்த டிரம்ப், அமைதிப் பேச்சுவார்த்தையில் இருந்தும் விலகியுள்ளார்.

வியாழனன்று நடந்த அந்தத் தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர்.

ஆப்கானிஸ்தானில் தற்போது சுமார் 14,000 அமெரிக்கப் படையினர் உள்ளனர். தாலிபன் அமைப்புடன் செய்துகொள்ள முன்மொழியப்பட்டிருந்த ஒப்பந்தத்தின்படி 20 வாரங்களுக்குள் 5,400 படையினரை திரும்பப்பெற்றுக்கொள்ள அமெரிக்கா ஒப்புக்கொண்டிருந்தது.

தாலிபன்படத்தின் காப்புரிமைAFP / GETTY IMAGES

தாலிபன் கட்டுப்பாட்டில் இருந்த அரசுக்கு எதிராக 2001இல் ஆப்கானிஸ்தானில், அமெரிக்கா படையெடுப்பு நடத்தியபின் சர்வதேச நாடுகளின் ராணுவ வீரர்கள் மட்டும் சுமார் 3,500 பேர் அங்கு இறந்துள்ளனர். அவர்களில் 2,300 பேர் அமெரிக்கர்கள்.

2019 பிப்ரவரியில் வெளியான ஐ.நா தரவுகளின்படி 32,000க்கும் மேலான குடிமக்களும் கொல்லப்பட்டுள்ளனர். -BBC_Tamil