ஹோண்டுராஸ்: மக்கள் பணத்தில் நகை வாங்கிய அதிபரின் மனைவிக்கு 58 ஆண்டுகள் சிறை

மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராஸில் நாட்டின் முன்னாள் குடியரசு தலைவரின் மனைவி ரோசா எலினா பொனிலாவுக்கு 58 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியுள்ளது நீதிமன்றம்.

52 வயதான பொனிலா அவர் கணவர் போர்ஃபிரி ஒ லுபோ பதவியில் இருந்த நான்கு ஆண்டுகளில் சர்வதேச நன்கொடை மற்றும் மக்கள் பணத்திலிருந்து 7,79,000 டாலர் மோசடி செய்த வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டார்.

அரசு தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், பொனிலா இந்த பணத்தை நகைகள் வாங்கவும் மருத்துவமனையில் பணம் கட்டவும் தன்னுடைய குழந்தைகளின் டியூசனுக்கு செலுத்தவும் பயன்படுத்திக்கொண்டார் எனக் குற்றம் சாட்டினார்.

அவருடைய தரப்பு வழக்கறிஞர் அவர் நிரபராதி எனவும் மேல் முறையீடு செய்வோம் எனவும் வாதாடினார்.

பிப்ரவரி 2018ல் மக்கள் பணத்தில் மோசடி செய்த வழக்கு விசாரணையில் பொனிலா கைதானார். ஏழை குழந்தைகளுக்கு காலணி வழங்குவதற்கான பட்ஜெட் அமைத்ததிலும் மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

பொனிலாவின் உதவியாளர் சால் எஸ்கோபாருக்கும் 48 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தண்டனை வழங்கும் போது பொனிலாவோ அவரது கணவரோ நீதிமன்றத்தில் இல்லை.

பொனிலா இந்த குடும்பத்தில் தண்டணை பெற்ற முதல் நபர் இல்லை. இதற்கு முன் போர்ஃபிரி ஒ லுபோவின் முதல் மகன் ஃபாபியோ அமெரிக்காவுக்கு போதைப்பொருள் கடத்தியதற்காக 24 ஆண்டுகள் தண்டனை பெற்றுள்ளார். -BBC_Tamil