தங்களுடனான பேச்சுவார்த்தையில் இருந்து அமெரிக்கா விலகினால் தங்களைவிட அமெரிக்காவுக்கே அதிக இழப்பு என்று தாலிபன் அமைப்பு கூறியுள்ளது. சென்ற மாதம் வரை எல்லாம் நன்றாகவே சென்றுகொண்டிருந்தது என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.
தாலிபன் அமைப்பினர் உடன் மேற்கொள்ளப்பட இருந்த அமைதி உடன்படிக்கை ரத்து செய்யப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்ப் சனிக்கிழமை இரவு அறிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமை கேம்ப் டேவிட்டில் தாலிபன் தலைவர்களை சந்திக்க இருந்தார் டிரம்ப். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஒரு அமெரிக்க ராணுவ வீரர் கொல்லப்பட்ட தாக்குதலுக்கு தாலிபன் பொறுப்பேற்ற பிறகு, திட்டமிடப்பட்டிருந்த சந்திப்பை ரத்து செய்த டிரம்ப், அமைதிப் பேச்சுவார்த்தையில் இருந்தும் விலகியுள்ளார்.
ஆப்கானிஸ்தான் போரை முடிவுக்கு கொண்டு வருவேன் என்று டிரம்ப் தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தார். தாம் பொறுப்பேற்றபோது இருந்த, 8000 படையினர் எண்ணிக்கையே அங்கு மீண்டும் இருக்கும் வகையில் மீதமுள்ளவர்கள் அமெரிக்காவுக்கே திரும்ப அழைக்கப்படுவார்கள் என்று டிரம்ப் சமீபத்தில் கூறியிருந்தார்.
18 ஆண்டுகளாக போர்க்களம் போல உள்ள ஆப்கானிஸ்தானில் தற்போது சுமார் 14,000 அமெரிக்கப் படையினர் உள்ளனர். தாலிபன் அமைப்புடன் செய்துகொள்ள முன்மொழியப்பட்டிருந்த ஒப்பந்தத்தின்படி 20 வாரங்களுக்குள் 5,400 படையினரை திரும்பப்பெற்றுக்கொள்ள அமெரிக்கா ஒப்புக்கொண்டிருந்தது.
- ‘ஆப்கானிஸ்தான் மக்கள் அதிகம் கொல்லப்படுவது அரசுப்படையால்தான்’
- முன்னெப்போதையும் விட மோசமான நிலையை ஆப்கானிஸ்தான் அடைந்தது ஏன்?
2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11 அன்று நடந்த இரட்டை கோபுர தாக்குதல் நடந்தது. அத்தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஒசாமா பின்லேடனின் அல்-கய்தா அமைப்புக்கு ஆதரவும், புகலிடமும் அளிப்பதாக அப்போது ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்துகொண்டிருந்த தாலிபனுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகளின் படைகள் ஆப்கானிஸ்தான் சென்றன.
தாலிபன் கட்டுப்பாட்டில் இருந்த அரசுக்கு எதிராக 2001இல் ஆப்கானிஸ்தானில், அமெரிக்கா படையெடுப்பு நடத்தியபின் சர்வதேச நாடுகளின் ராணுவ வீரர்கள் மட்டும் சுமார் 3,500 பேர் அங்கு இறந்துள்ளனர். அவர்களில் 2,300 பேர் அமெரிக்கர்கள்.
1996 வரை 2001 வரை நடந்த தாலிபன் ஆட்சியில் மதச் சட்டங்கள் கடுமையாக அமலானதுடன், பெண்கள் மிகவும் மோசமாக நடத்தப்பட்டனர்.
2019 பிப்ரவரியில் வெளியான ஐ.நா தரவுகளின்படி 32,000க்கும் மேலான குடிமக்களும் கொல்லப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி இதுவரை நடந்த சண்டைகளில் 58,000 ஆப்கன் காவல் படையினரும், 42,000 ஆயுதப் போராளிகளும் கொல்லப்பட்டுள்ளனர்.
திட்டமிடப்பட்ட சந்திப்பின் பின்னணி
அமெரிக்க அதிபர் டிரம்ப், தாலிபன் தலைவர்கள் மற்றும் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரஃப் கனி ஆகியோருடன் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக அறிவித்திருந்தார்.
அமெரிக்க அரசின் கைப்பாவை என்று கூறி ஆஃப்கன் அரசுடன் நேரடியாக பேச்சு நடத்த தாலிபன் மறுத்திருந்ததே இதற்கு காரணம்.
இந்தத் பேச்சுவார்த்தையை ரத்து செய்த அமெரிக்காவின் செயல்பாடு அனுபவமும் முதிர்ச்சியும் அற்றது என தாலிபன் செய்தித்தொடர்பாளர் ஜபிகுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார்.
வரும் செப்டம்பர் 23 அன்று ஆஃப்கன் அரசுடன் பேச்சு நடத்த இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். எனினும், இதை அரசு தரப்பு இன்னும் உறுதி செய்யவில்லை. -BBC_Tamil