அமெரிக்கா சீனா வர்த்தகப்போர்: இறங்கி வந்த டொனால்ட் டிரம்ப் – கூடுதல் வரி விதிப்பு தள்வைப்பு

சீனப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட கூடுதல் இறக்குமதி வரி விதிப்பை 2 வாரங்களுக்குத் தள்ளி வைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

250 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான இந்த வரியை நல்லெண்ண அடிப்படையில் தள்ளி வைப்பதாக அவர் ட்வீட் செய்துள்ளார்.

அக்டோபர் 1ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வருவதாக இருந்த இந்த 5 சதவீத கூடுதல் வரியை இரண்டு வாரங்களுக்குத் தள்ளி வைப்பதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தை

சீனா கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறுகிறார் டிரம்ப். சீனாவும் அமெரிக்கா பொருட்கள் சிலவற்றுக்கான இறக்குமதி வரியை ரத்து செய்கிறது.

இரண்டு நாடுகளுக்கும் இடையே வர்த்தகப் போர் கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது.

இதனை முடிவுக்குக் கொண்டு வர இரு தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், அதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

மீண்டும் ஒரு புதிய பேச்சுவார்த்தையைத் தொடங்க இரு அரசும் முடிவு செய்துள்ள வேளையில் இந்த வரி விதிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

எப்போது தொடங்கியது?

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 1,300 பொருட்களின் மீது புதிய வரிகளை விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதற்குப் பதிலடியாக அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு வரி விதிக்கப் போவதாக அறிவித்தது சீனா.

அமெரிக்க – சீன வர்த்தகப் போர் உங்களை எப்படி பாதிக்கும்?

சோயாபீன்ஸ், வாகனங்கள் மற்றும் ஆரஞ்சு பழச்சாறு உள்பட 106 அமெரிக்கப் பொருட்களின் மீது 25 சதவீதம் அதிக வரி விதிக்கப்போவதாக 2018ஆம் ஆண்டு சீனா தெரிவித்திருந்தது. 1,300 சீனப் பொருட்களுக்கு 25 சதவீத அதிக வரி விதிக்கும் விவரங்களை அமெரிக்கா அறிவித்த சில மணிநேரத்தில், பதிலடியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சீனாபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

சீனாவின் நியாயமற்ற அறிவுசார் சொத்துரிமைக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைதான் தங்களின் அதிக வரி விதிப்பு முன்மொழிவு என்று வெள்ளை மாளிகை விளக்கம் அளித்து இருந்தது.

இரு நாடுகள் இடையேயிலான வர்த்தகப் போர் சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் எதிரொலித்தது.

இதனைத் தொடர்ந்து இரு நாடுகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. ஆனால், முடிவு ஏதும் எட்டப்படவில்லை.

சீன நாள்

சீனா அமெரிக்காபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

அக்டோபர் 1ஆம் தேதி நவ சீனா உருவாக்கப்பட்ட நாள், அதனால் இறக்குமதி பொருட்களுக்கான வரி அமலாக்கபப்டுவதை தள்ளி வைக்க வேண்டுமெனச் சீனாவின் துணை பிரிமியர் லியூ ஹ கேட்டுக்கொண்டதை அடுத்து இந்த வரி விதிப்பைத் தள்ளி வைத்ததாக டிரம்ப் கூறி உள்ளார். -BBC_Tamil