இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் மூண்டு விட வாய்ப்பு!

இந்தியாவுடன் எதிர்பாராத விதமாக போர் மூண்டு விட வாய்ப்பிருப்பதாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்ட குரேஷி, கூட்டத்தின் இடையே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர், ஜம்மு-காஷ்மீரை முன்வைத்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே எதிர்பாராத விதமாக போர் மூண்ட விட வாய்ப்பிருப்பதாக தெரிவித்தார். ஆதலால் போர் நடைபெற்றால், என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை பாகிஸ்தானும், இந்தியாவும் புரிந்து கொள்ளும் என்று நம்புவதாகவும் அவர் கூறினார்.

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் ஆணையர் மிஷெல் பேச்லெட்டை சந்தித்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் கட்டுப்பாடுகளின்கீழ் இருக்கும் ஜம்மு-காஷ்மீர் பகுதிகளுக்கு வந்து உண்மை நிலவரத்தை பார்வையிட்டு அறிக்கை அளிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

தமது அழைப்பை ஏற்று, இந்தியா மற்றும் பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள ஜம்மு-காஷ்மீர் பகுதிகளுக்கு வந்து நிலவரத்தை பார்வையிட மிஷெல் பேச்லெட்டும் மிகுந்த ஆர்வமாக இருப்பதாகவும் குரேஷி குறிப்பிட்டார்.

இந்தியா- பாகிஸ்தான் இடையேயான இருதரப்பு பேச்சு குறித்து பேசிய குரேஷி, தற்போதைய சூழ்நிலை மற்றும் இந்தியாவின் மனநிலை ஆகியவற்றை வைத்து பார்த்தால் இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என்று கருதுவதாக அவர் கூறினார்.

காஷ்மீர் பிரச்னைக்குத் தீர்வு காண பன்முக அமைப்பு அல்லது 3ஆவது தரப்பின் மத்தியஸ்தம் தேவைப்படலாம் என்றும், அந்தப் பணியை அமெரிக்கா செய்யும்பட்சத்தில் அது முக்கியத்துவம் பெறும் என்றும், ஏனெனில் தெற்காசியப்ப பிராந்தியத்தில் அமெரிக்காவுக்கு மிகுந்த செல்வாக்கு உள்ளது என்றும் தெரிவித்தார்.

முன்னதாக, ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் குரேஷி கடந்த செவ்வாய்க்கிழமை பேசியபோது, ஜம்மு-காஷ்மீர் நிலவரம் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். அப்போது இந்தியத் தரப்பில், சர்வதேச பயங்கரவாதத்தின் மையமான பாகிஸ்தானிடம் இருந்து வரும் ஜோடிக்கப்பட்ட கதை என்று பதிலடி கொடுக்கப்பட்டது.

இந்நிலையில்இஸ்லாமாபாதில் செய்தியாளர்களைச் சந்தித்த பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் முகமது பைசல், பாகிஸ்தான் பயணத்தின்போது காஷ்மீர் பிரச்னையை முஸ்லிம் மக்கள் சம்பந்தப்பட்ட பிரச்னை கிடையாது என்று சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரக வெளியுறவு அமைச்சர்கள் கூறியதாக வெளியான செய்திகளை மறுத்தார்.

அந்த செய்திகள் யூகத்திலானவை என்று தெரிவித்த அவர், காஷ்மீர் விவகாரத்தில் இருநாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும் பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்திருப்பதாக குறிப்பிட்டார்.

-athirvu.in