சௌதி அரசுக்கு சொந்தமான அரம்கோ எண்ணெய் நிறுவனத்தின் இரு வளாகங்களில் நடத்தப்பட்ட ஆளில்லா விமான (டிரோன்) தாக்குதலால் பெரும் தீ உண்டாகியுள்ளது.
இரான் ஆதரவளிக்கும், ஏமனில் உள்ள ஹூதி கிளர்ச்சியாளர்கள் 10 ஆளில்லா சிறிய விமானங்களை ஏவி தாக்குதல் நடத்தியதாகத் தெரிவித்துள்ளது.
எனினும் இந்தத் தாக்குதலின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை என சௌதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் நேரப்படி இன்று காலை நான்கு மணிக்கு இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
அப்கைக் எனும் இடத்தில் அமைந்துள்ள அரம்கோ நிறுவனத்தின் மிகப்பரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் குராய்ஸ் எனும் இடத்தில் உள்ள எண்ணெய் வயல் ஆகியவற்றில் தாக்குதல் நடந்துள்ளது. தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சௌதி அரசு ஊடகம் தெரிவிக்கிறது.
- ரிலையன்சில் சௌதி அரசு நிறுவனம் முதலீடு செய்வது ஏன்?
- கார்கில் போர் தோல்வியை எவ்வாறு பார்த்தது பாகிஸ்தான் ராணுவம்?
அப்கைக் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் உலகின் பயன்பாட்டுக்கு தேவையான 7% பெட்ரோலிய எண்ணெய் உற்பத்தியை சுத்திகரிக்கும் வசதி உள்ளது. குராய்ஸ் எண்ணெய் வயலில்தான் உலக அளவில் உற்பத்தியாகும் கச்சா எண்ணெயில் 1% கிடைக்கிறது.
2006இல் அப்கைக் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் அல்-கய்தா நடத்தத் திட்டமிட்ட தற்கொலைத் தாக்குதலை சௌதி காவல் படைகள் முறியடித்திருந்தன.
சௌதி விமானப் படை மற்றும் சௌதி தலைமையிலான கூட்டுப்படை சமீப ஆண்டுகளாக ஏமனில் ஹூதி கிளிர்ச்சியாளர்களுக்கு எதிராக வான் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
2015இல் இருந்து போர் நடந்து வரும் ஏமனில் அதிபர் அப்த்ராப் மன்சூர் ஹாதிக்கு ஆதரவாக சௌதி அரசு உள்ளது.
இன்றைய தாக்குதல்கள் சௌதி அரேபியாவின் ஆதரவைப் பெற்றுள்ள ஏமன் அரசுக்கு எதிராகப் போரிடும் ஹூதி கிளர்ச்சியாளர்களின் தந்திரோபாய அச்சுறுத்தலை வெளிக்காட்டும் வகையில் இது அமைந்துள்ளது.
உலகின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமாக அரம்கோ இருக்கும் நிலையில் இந்தத் தாக்குதல் கூடுதல் கவனம் பெற்றுள்ளது.
ஹூதி கிளர்ச்சியாளர்கள் ஆளில்லா விமானத்தைப் பயன்படுத்தும் அளவுக்கு வல்லமை பெற்றிருந்தால், அந்த அளவுக்கான வசதிகள் அவர்களுக்கு எங்கிருந்து கிடைக்கின்றன என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
-BBC_Tamil