ஹலால் சான்றிதழை நிதி அமைச்சு வழங்குகிறதா? மறுக்கிறது ஜாகிம்

மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டுத் துறையான ஜாகிம், அம்னோ உதவித் தலைவர் இஸ்மாயில் சப்ரி யாக்கூப் செப்டம்பர் 13-இல் புத்ரா உலக வாணிக மையத்தில் உரையாற்றியபோது, இப்போதெல்லாம் நிதி அமைச்சுத்தான் ஹலால் சான்றிதழை வழங்குகிறது என்று குறிப்பிட்டிருப்பதை மறுக்கிறது.

“அக்கூற்றை ஜாகிம் மறுக்கிறது. ஹலால் சான்றிதழை ஜாகிமும் அந்தந்த மாநிலங்களில் உள்ள இஸ்லாமிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைப்புகளும்தான் வழங்குகின்றன என்பதை உறுதிபட தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம்”, என ஜாகிம் தொடர்புப் பிரிவு நேற்று ஓர் அறிக்கையில் கூறிற்று.

த ஸ்டாரில் இஸ்மாயில் கூறியதாக வெளிவந்த ஒரு செய்தியைத் தொடர்ந்து ஜாகிம் அந்த அறிக்கையை வெளியிட்டிருந்தது. இஸ்மாயில், “புது அரசாங்கத்தை மலாய்க்கார்கள் வழிநடத்துவதுபோல் தெரிந்தாலும் மறைமுகமாக டிஏபிதான் அதை வழிநடத்துகிறது”, என்று கூறி முன்பு ஜாகிமிடம் இருந்த ஹலால் சான்றிதழ் வழங்கும் அதிகாரம் இப்போது நிதி அமைச்சுக்குச் சென்று விட்டதாகக் குறிப்பிட்டிருந்தார்.

“நிதி அமைச்சுக்கு யார் பொறுப்பு என்பது நமக்குத் தெரிந்ததே”, என்றும் பெரா எம்பி கூறினார்.

இதைத்தான் மறுக்கிறது ஜாகிம்.