பிரேசில் ஆய்வாளரான கார்லோஸ் டேவிட் டி சண்டனா, அமேசானில் ‘போராக்’ என்று அறியப்படும் மின்சார விலாங்கு மீன் வகைகளை கண்டபிடிக்க முயன்று வந்தார்.
இதற்காக நீரோடைகளிலும், ஆறுகளிலும் இறங்கும்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பலவற்றை அவர் மேற்கொள்ள வேண்டியிருந்தது.
ரப்பர் கையுறைகளை எப்போதும் அவர் அணிந்திருந்தாலும், சில வேளைகளில் மின்சார அதிர்வுகளுக்கு உள்ளாவதை தடுக்க முடியவில்லை.
ஆனால், அவர் அனுபவித்த கஷ்டங்களுக்கு பயன் கிடைத்துள்ளது. இவரது ஐந்து ஆண்டு தேடலின் பயனாக மின்சார விலாங்கு மீனின் இரண்டு புதிய வகைகளை கண்டுபிடித்துள்ளார்.
அதில் ஒன்று 860 வால்ட் மின்சாரத்தை வெளியிடும் சக்தியுடையது. இத்தகைய மீனிடம் இருந்து அதிக அளவிலான மின்சாரம் வெளியிடும் வரலாற்று பதிவை உருவாக்கியுள்ள மீனின் வகை இதுவாகும்.
இதற்கு முன்னால் 650 வால்ட் மின்சாரம் வெளியிடும் மீன் கண்டபிடிக்கப்பட்டதே அதிகபட்ச அளவாக பதிவாகியிருந்தது.
- அமேசான் காட்டுத்தீ: தப்பிச் சென்றிருக்குமா விலங்குகள்?
- கூவுவதற்கான உரிமையை சட்டப்போராட்டம் நடத்தி வென்ற சேவல்
தற்காப்பும், இரையை வேட்டையாடுதலும்
இத்தகைய மின்சார விலாங்கு மீன் வகை கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த தகவலை அமெரிக்காவின் வாஷிங்டனிலுள்ள இயற்கை வரலாற்று தேசிய அருங்காட்சிகத்தின் ஸ்மித்சோனியன் நிலையத்தின் விஞ்ஞானி ஒருவர் ‘நேச்சர் கம்யூனிகேஷன்’ என்ற சஞ்சிகையில் வெளியிட்டுள்ளார்.
‘போராக்’ என்று அறியப்படுகிற இந்த மின்சார ஈல் மீன் வகை தென் அமெரிக்காவில் காணப்படுகிறது. இதன் நீளம் 2.5 மீட்டர் வரை இருக்கலாம். குறைவான அளவு மின்சாரத்தை உற்பத்தி செய்யும் சக்தியுடைய அத்தகைய மீன்களில் சுமார் 250 வகைகள் காணப்படுகின்றன.
‘போராக்’ வகை விலாங்கு மீன்களே அதிக சக்தி வாய்ந்த மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன. இந்த மின்சார சக்தியை இரையை வேட்டையாடுவதற்கும், தற்காத்து கொள்ளவும் இவை பயன்படுத்தி கொள்கின்றன. இந்த மீனிலுள்ள மூன்று உறுப்புகளால் இந்த மின்சக்தி உற்பத்தி செய்யப்படுகிறது.
ஆனால், மேலதிகமாக இரண்டு புதிய விலாங்கு மீன் வகைள் இருப்பது இப்போது கண்டறியப்பட்டுள்ளது. இவை வெளியிடும் மின்சக்தியை வைத்தும் டிஎன்ஏ வரிசையை வைத்தும் இவற்றின் வேறுபாடு குறிக்கப்பட்டுள்ளது.
250 ஆண்டுகளுக்கு பின்னர், இரண்டு புதிய விலாங்கு மீன் வகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமேசானில் ஏராளமாக பல்லுயிரின பெருக்கம் காணப்படுவதற்கு இது எடுத்துக்காட்டாகும் என்று சாண்டனா தெரிவிக்கிறார்.
“அமேசானில் மட்டுமல்ல. இந்த கிரகத்தின் பல்லுயிரின பெருக்கும் பற்றிய சிறு பகுதியையே நாம் அறிந்து வைத்துள்ளோம். அவற்றின் உயிரியல் பற்றி மிகவும் குறைவாகவே நாம் அறிந்து வைத்துள்ளோம்,” என்கிறார் அவர்.
“அவற்றை அழிந்துபோக நாம் அனுமதிக்க முடியாது. நீண்டகால அளவில் இது மாபெரும் இழப்பாக அமையும்” என்று அவர் தெரிவிக்கிறார்.
“இந்தப் பல்லுயிர் பெருக்கம் பற்றிய ஆய்வுகள் மிகவும் முக்கியமானவை. இன்று நாம் வாங்குகின்ற மருந்துகள் பல மூலிகைகளை மற்றும் விலங்குகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் மூலம் கிடைத்தவையே. ஒவ்வொன்றும் மாபெரும் மரபணு களஞ்சியமாகும்,” என்று சாண்டனா கூறுகிறார்.
ஷாக் அடிக்கும் மீன்
வீடுகளில் பயன்படுத்தக்கூடிய மின்சாரத்தில் சுமார் நான்கு மடங்கு அதிகமாக இருக்கும் மின்சார சக்தியான 860 வால்ட் வெளியிடக்கூடிய சக்தி கொண்டதாக இந்த விலாங்கு மீன் வகை இருந்தாலும், அம்பியர் வீதம் குறைவாக இருப்பதால், மனித உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடியது அல்ல என்று சரண்டனா பிபிசியிடம் விளக்கினார்.
இந்த விலாங்கு மீன் முதலில் மின்சாரத்தை வெளியிடும்போது, இது ஒன்று அல்லது இரண்டு வினாடிகள் நீடிக்கிறது. பின்னர் மீண்டும் மின்சாரத்தை வெளியிட கொஞ்சம் நேரம் எடுத்துக்கொள்கிறது என்று சாண்டனா தெரிவித்தார். இந்த மீனிடம் இருந்து சில முறை மின்சார அதிர்வுகளை சாண்டனாவே பெற்றுள்ளது குறிப்பிடத்கத்கது.
“நிச்சயமாக ஷாக் அடிக்கும்போது தசை இழுக்கப்படும் உணர்வு தோன்றுகிறது,” என்கிறார் சாண்டனா.
ஆனால், ஆறுகளில் இத்தகைய பல மீன்களால் சூழப்பட்டுவிட்டால் சிக்கல்தான். இந் வகை மீன்களில் ஒன்று மின்சாரத்தை வெளிப்படுத்தும்போது, பிற மீன்களும் மின்சாரத்தை வெளியிடும். அப்போது இதயம் நின்றுபோகவும், நீரில் முழ்கிபோவதற்கும் வாய்ப்பு உள்ளது.
ஆனால், இவ்வாறு நடந்ததாக தான் இதுவரை கேள்விப்பட்டதில்லை என்றும் சாண்டனா கூறியுள்ளார்.
இதற்கு முன்னால் நினைத்ததைபோல, இந்த வகை விலாங்கு மீன் தனியாக வாழ்வதில்லை. கூட்டமாக வாழ்கின்றன.
மின்கலம் கண்டுபிடித்த இயற்பியலாளர் அசன்ஸாண்டிரா வோல்டாவின் பெயரை வைத்து எலக்ட்ரோஃபோரஸ் எலக்ட்ரிகஸூக்கு பெயர் வழங்கப்பட்டுள்ளது.
2016ம் ஆண்டு மறைந்த ஸ்மித்சோனியன் ஆய்வாளரும், விலங்கியல் நிபுணருமான ரிச்சர்ட் பி. வாரிக்கு மதிப்பளிக்கும் வகையில், இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள பிற உயிரினங்களுக்கு எலக்ட்ரோஃபோரஸ் வாரி என்று பெயரிடப்பட்டுள்ளது.
சின்கு மற்றும் தாபோஜோஸ் ஆறுகளில் கண்டறியப்பட்ட இந்த இரண்டு புதிய விலாங்கு மீன் வகைகளும், இதுவரை உயிர் ஆபத்து விளைவிக்க்க்கூடியது என்று கருதப்படவில்லை. ஆனால், தற்போதைய சுற்றுச்சூழல் நெருக்கடியால் இந்த நிலையை அமேசான் மாற்றக்கூடும் என்று தெரிகிறது.
“பிலோ மென்றே நீர்மின் உற்பத்தி அணையால் சின்கு ஆறு அழிந்து வருகிறது. இதனால் மீன்களின் இனப் பெருக்கத்தில் பாதிப்பு ஏற்படும்” என்று சாண்டனா தெரிவிக்கிறார்.
“ஒட்டுமொத்தமாக அமேசானின் பல்லுயிர் பெருக்கத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இன்னும் பல உயிரினங்கள் கண்டுபிடிக்க வேண்டிய சூழல் நிலவுகையில், இவ்வாறு நிகழ்கிறது” என்று சாண்டனா வேதனைப்படுகிறார். -BBC_Tamil