ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத் தலைவனை விரைவில் பிடிக்கப் போவதாக இங்கிலாந்து ராணுவ தலைமை கமாண்டர் சூளுரை!

தலைமறைவாக உள்ள ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத் தலைவன் அபு பக்கர் அல் பக்தாதியை விரைவில் உயிருடனோ, பிணமாகவோ பிடிக்கப் போவதாக அந்த அமைப்புக்கு எதிரான கூட்டமைப்பில் உள்ள இங்கிலாந்தின் ராணுவ தலைமை கமாண்டர் கிரிஸ் ஜிகா (Chris Ghika)அறிவித்துள்ளார்.

மத்தியக் கிழக்கு நாடுகளில் இருந்து 13 மாத பயணத்துக்குப் பின் இங்கிலாந்து திரும்பிய அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். ஈராக் மற்றும் சிரியாவில் தோல்வியடைந்தபின், அபு பக்கர் அல் பக்தாதி அவனது படையினரை சண்டையிட வைத்து , சாகவிட்டு தப்பியோடியவன் என குறிப்பிட்டுள்ளார்.

19 மில்லியன் யூரோக்கள் அவனது தலைக்கு வெகுமதியாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவனுக்கு தற்போது முக்கியத்துவமே வழங்குவதில்லை எனக் கூறிய அவர், அந்த அமைப்பிடம் தற்போது போதிய நிதி இல்லை என்றார். இருப்பினும், ஆயுதம் மற்றும் நிதி உதவி தொடர்வதால் ஈராக்கிற்கும், சிரியாவுக்கும் தற்போதும் ஒரு அச்சுறுத்தலாகவே அந்த அமைப்பு இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கெனவே ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பினர் ஏராளமானோரை பிடித்துவிட்டதாகக் கூறியுள்ள கிரிஷ், அவர்களின் தலைவனை வெகு விரைவில் உயிரோடோ, சடலமாகவோ பிடிக்கப் போவதாக சூளுரைத்துள்ளார்.

-athirvu.in