செளதி அரசுக்கு சொந்தமான அரம்கோ எண்ணெய் நிறுவனத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் எண்ணெய் வயல் ஒன்றைத் தாக்க ட்ரோன் மற்றும் ஏவுகணை ஏவப்பட்ட இடத்தை கண்டுபிடித்துவிட்டதாக அமெரிக்கா கூறியுள்ளது.
இரானின் தெற்குப் பகுதியில் அமைந்திருக்கும், பாரசீக வளைகுடாவின் வடக்கு முனையிலிருந்தே இந்த தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளதாக ஒரு மூத்த அமெரிக்க அதிகாரி கூறி உள்ளார்.
ஏமனில் இருந்து தாக்குதல் நடந்தால் அதை எதிர்கொள்ளத் தயாராக சௌதியின் வான் பாதுகாப்பு அமைப்புகள் தெற்கு திசையை நோக்கி நிலை நிறுத்தப்பட்டிருந்ததால், அவர்களால் இந்த ட்ரோன் மற்றும் ஏவுகணைகளைத் தடுத்து நிறுத்த முடியாமல் போய்விட்டது. ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை இரான் தொடர்ந்து மறுத்து வருகிறது.
செளதி அரசு தலைமையில், மேற்கத்திய நாடுகளின் ஆதரவு பெற்ற ராணுவப் படை ஏமன் அரசுக்கு ஆதரவாகச் செயல்படுகிறது. ஏமன் அரசை எதிர்த்துப் போரிட்டு வரும் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு இரான் ஆதரவளிக்கிறது. -BBC_Tamil