பொருளாதார சரிவு: வறுமையால் கிட்னி விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்ட இளைஞர்கள்?

பொருளாதாரத்தில் கடும் சரிவை சந்தித்து வரும் ஈரானில் வறுமையால் பல இளைஞர்கள் தங்களது கிட்னியை விற்க முன்வந்துள்ளதாகவும், அதை தெருக்களில் விளம்பரப்படுத்தியதாகவும் ஈரான் எதிர்ப்பு அமைப்பு அம்பலப்படுத்தியுள்ளது.

ஒபாமா காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அணு ஒப்பந்தத்தில் இருந்து அதிபர் டிரம்பின் அமெரிக்க அரசு விலகியதை அடுத்து அந்நாட்டின் முக்கிய வளமான எண்ணெய் வர்த்தகத்தை முடக்கும் வகையில் அமெரிக்கா கடுமையான பொருளாதாரத் தடைகளையும் விதித்துள்ளது. இதனால், மருந்துப்பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை பன்மடங்கு ஈரானில் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் ஈரானில் கிட்னி தெரு என்ற ஒரு தெருவே உள்ளதாகவும், அங்கு இளைஞர்கள் தங்களது கிட்னி, கல்லீரல், எலும்பு மஜ்ஜை, ரத்த பிளாஸ்மா உள்ளிட்டவற்றை விற்பதாக விளம்பரப்படுத்தியுள்ளனர் என என்.சி.ஆர்.ஐ. என்ற ஈரான் எதிர்ப்பு தேசிய கவுன்சில் அம்பலப்படுத்தியுள்ளது.

22 வயது கொண்ட இளைஞர் தனது தாயின் மருத்துவச் செலவுக்காக தன் கிட்னியை விற்பதாகக் கூறி அவரது ரத்தத்தின் வகை, பாலினம், தொடர்பு முகவரியுடன் குறிப்பிட்டு தெருவில் ஒட்டியுள்ளார்.

இதேபோல் ஏராளமான இளைஞர்களும் தங்களது உடல் பாகங்களை வறுமையால் விற்பதாகக் கூறி தேவைப்படுவோர் அணுகுமாறு கோரியுள்ளனர். நோயாளியின் உடல் நிலை, எளிதில் கிடைக்கக் கூடிய ரத்த மாதிரி, உடல் பாகத்துக்கான தேவை, உடனடி அவசியம், கொடையாளரின் ஆரோக்கியம், கொடையாளரின் உடனடி பணத் தேவை ஆகியவற்றைப் பொறுத்து ஒரு கிட்னி 71 ஆயிரம் ரூபாய்க்கும், கல்லீரல் 35 லட்சம் ரூபாய் வரைக்கும் விற்கப்படுவதாகவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

நாட்டின் இயற்கை வளங்களைக் கொள்ளையடித்து, போர், அணு ஆயுதம் ஆகியவற்றில் அரசு செலவிடுவதாகவும், தெருவில் கிட்னி போன்ற உடல் பாக விற்பனை விளம்பரம் ஒட்டப்படாத வீட்டுக் கதவுகளே இல்லை என்ற நிலைக்கு மக்களைத் தள்ளிவிட்டதாகவும் அந்த அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

சில மருத்துவர்களும், இடைத்தரகர்களும் இதில் கொள்ளை லாபம் பார்ப்பதாகவும், அரசு அதிகாரிகளுக்கு இவை குறித்து தெரிந்தும் கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

-athirvu.in