கடந்த வாரம் செளதி அரேபிய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனமான அரம்கோவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாகத் தேவையான நடவடிக்கைகளுடன் பதிலடி கொடுக்கப்படும் என செளதி அரேபியா தெரிவித்துள்ளது.
மேலும் இந்த தாக்குதலுக்கு பின்னால் இரான் இருப்பதாக அந்நாடு மீண்டும் குற்றஞ்சாட்டி உள்ளது.
செளதி அரேபியாவின் வெளிநாட்டு விவகாரங்களுக்கான அமைச்சர் அடெல் அல் ஜுபேர், இந்த தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள், இரான் நாட்டை சேர்ந்தது என்றும், விரைவில் விசாரணையின் மூலம் கிடைத்த தகவல்கள் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.
ஆனால் தனக்கும் இந்த தாக்குதலுக்கு எந்த தொடர்பும் இல்லை என இரான் தெரிவித்துள்ளது.
முன்னதாக, செளதி அரேபியாவுக்குப் படைகளை அனுப்புவதாக அமெரிக்க அறிவித்திருந்த நிலையில், இரானின் மூத்த ராணுவ அதிகாரி ஒருவர், தாக்குதல் தொடுக்க வரும் யாரையும் அழிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.
- எண்ணெய் வயல் தாக்குதல்: ஆதாரத்தை வெளியிட்டது செளதி – இரான் மீது குற்றச்சாட்டு
- செளதி அரேபியா தாக்குதல்: கச்சா எண்ணெய் விலை 30 வருடங்களில் இல்லாத அளவு உயர்வு
செப்டம்பர் 14ஆம் தேதி நடத்தப்பட்ட இந்த தாக்குதலால் சர்வதேச அளவில் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டது. இரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்கள் இதற்குப் பொறுப்பேற்றனர்.
அமெரிக்கா மற்றும் இரானுக்கு இடையே இருந்து வந்த பதற்றம், இரானின் அணு ஆயுத செயல்பாட்டைக் கட்டுப்படுத்தும் ஒப்பந்தம் ஒன்றிலிருந்து அமெரிக்கா வெளியேறி, இரான் மீது மீண்டும் தடைகளை விதித்திலிருந்து அதிகரித்தது.
ரியாதில் செய்தியாளர்களிடம் பேசிய ஜுபேர், செளதி அரசு தங்களின் கூட்டணி நாடுகளுடன் ஆலோசித்து வருவதாகவும், விசாரணை முடிந்த பிறகு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். ஆனால் எந்த மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவிக்கவில்லை.
மேலும் இந்த தாக்குதல்கள், அப்காய்க் எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் குராசிஸ் எண்ணெய் வயலில் நடத்தப்பட்ட தாக்குதல் வடக்கு திசையிலிருந்து வந்ததாகவும், ஏமனிலிருந்து வரவில்லை என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் அது எங்கிருந்து நடத்தப்பட்டிருக்கும் என்று குறிப்பாக கூறவில்லை.
மேலும் சர்வதேச நாடுகள் இது குறித்து ஒரு தரப்பை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலுக்கு காரணமானவர்களுக்குக் கண்டனம் தெரிவிக்கும் பொறுப்பு சர்வதேச நாடுகளுக்கு உள்ளது என்றும், சர்வதேச பொருளாதாரத்தை அச்சுறுத்திய இந்த தாக்குதலுக்கு திடமான மற்றும் தெளிவான ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
புதன்கிழமையன்று, ட்ரோனின் மிச்சங்கள், மற்றும் ஏவுகணைகள் காண்பித்து இது இரானின் செயல்பாட்டை நிரூபிப்பதாக உள்ளது என்றும் கூறியது.
- சௌதி எண்ணெய் ஆலை தாக்குதல் சாமானிய இந்தியர்களை எப்படி பாதிக்கும்?
- செளதி அரேபியா ஏன் இந்தியாவில் மிகப்பெரிய முதலீடு செய்கிறது?
இந்த தாக்குதலுக்கு இரான் தான் காரணம் என அமெரிக்காவும் குற்றம் சுமத்தியிருந்தது. பெயர் வெளியிட விரும்பாத மூத்த அதிகாரி ஒருவர் தாக்குதல்க இரானின் தெற்கு பகுதியில் இருந்து நடத்தப்பட்டதாக ஆதாரங்கள் தெரிவிப்பதாக அமெரிக்க ஊடகங்களிடம் தெரிவித்தார்.
வெள்ளியன்று பாதுகாப்பு செயலர் மார்க் எஸ்பர் செளதி அரேபியாவின் வான் மற்றும் ஏவுகணை பாதுகாப்பை வலுப்படுத்த அமெரிக்கப் படைகளை அனுப்புவதாக தெரிவித்தார்.
அதன்பின் இரான் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் இரான் மீது புதிய தடைகளை விதித்தார். நாட்டின் மத்திய வங்கி மற்றும் இரானின் முதலீட்டு நிதியத்தை இலக்கு வைத்து இந்த தடை விதிக்கப்பட்டது.
என்ன சொல்கிறது இரான்?
இரான் புரட்சிகர படை தளபதி மேஜர் ஜென்ரல் ஹுசேன் சலாமி, “எச்சரிக்கையாக இருங்கள், எந்தத் தவறும் செய்யாதீர்கள்,” என்று அமெரிக்கா மற்றும் சௌதி அரேபிய அரசுகளுக்குக் கூறியுள்ளார்.
“எச்சரிக்கையாக இருங்கள், அளவான கோபம் என்றுமே அளவான கோபமாக இருக்காது. யார் தாக்குதல் தொடுத்தாலும் நாங்கள் தயாராகவுள்ளோம்.” இரானில் பிடிப்பட்ட ட்ரோனின் மிச்சங்களை காட்சிப்படுத்தும் நிகழ்ச்சியின்போது தெரிவித்தார்.
“தாக்குதல் தொடுப்பவர்களை முழுவதுமாக அழிக்கும் வரை விடமாட்டோம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
“தங்களது கடந்த கால தோல்விகளிலிருந்து அமெரிக்கா கற்றுக் கொள்ள வேண்டும் எனவும், இரான் மீது தாக்குதல் தொடுத்தால், அதிரடியான பதிலடி கிடைக்கும் எனவும் இரான் புரட்சிகர படையின் வான்வெளி பிரிவின் பிரிகேடியர் ஜெனரல் அமிராலி ஹஜிசாடே தெரிவித்துள்ளார்.”
இரானின் புரட்சிப் படை அந்நாட்டு ராணுவத்தின் அதிமுக்கிய படையாகும்.