சவுதி தாக்குதலைச் சுட்டிக் காட்டி அமெரிக்காவைச் சீண்டும் ரஷ்யா!

சவுதியில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலை, புத்திசாலித்தனமான அமெரிக்க ஏவுகணைத் தடுப்பு அமைப்பால் தடுக்க முடியவில்லையா? என்று ரஷ்யா சீண்டியுள்ளது.

ஆயுதச் சந்தையில் முன்னணி இடம்பிடிப்பது தொடர்பாக ரஷ்யாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே முட்டல் மோதல் நிலவி வருகிறது. தங்கள் நாட்டுத் தயாரிப்புகள் தான் சிறந்தவை என்று இரு நாடுகளும் மாறி மாறி பிரச்சாரம் செய்து வருகின்றன.

அந்த வகையில் சவுதி அரம்கோ எண்ணெய் நிறுவனம் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலை வைத்து அமெரிக்காவை ரஷ்யா சீண்டியுள்ளது. அமெரிக்காவின் ரேய்த்தியான் (raytheon) நிறுவனத் தயாரிப்பான பாட்ரியாட் ஏவுகணைத் தடுப்பு அமைப்பை சவுதி பயன்படுத்தி வருகிறது.

இந்த அமைப்பால், தாக்குதலைத் தடுக்க முடியவில்லையா? என்று ரஷ்யாவின் பாதுகாப்புத் துறை செய்தி தொடர்பாளர் மரியா ஜகரோவா (Maria Zakharova) கேள்வி எழுப்பியுள்ளார். ஓராண்டுக்கு முன், அமெரிக்காவின் ஏவுகணைகள், இலக்கை தாக்கி அழிக்காதது அனைவருக்கும் நினைவிருக்கலாம் என்றும் அவர் கிண்டலடித்துள்ளார்.

அண்மையில் துருக்கிக்குச் சுற்றுப்பயணம் சென்ற ரஷ்ய அதிபர் விளாடிமின், தங்கள் நாட்டுத் தயாரிப்பான எஸ்.400 ஏவுகணைத் தடுப்பு அமைப்பை வாங்கி இருந்தால், தாக்குதலைத் தவிர்த்து இருக்கலாம் என்று தெரிவித்தார்.

பாட்ரியாட் அமைப்பானது, எந்த திசையில் தாக்குதல் நடத்த வேண்டும் என்று தீர்மானித்து வைக்கப்படுகிறதோ அங்கு மட்டுமே தாக்குதல் நடத்தும். ஆனால், எஸ்.400 அமைப்பானது 360 டிகிரி கோணத்திலும் தாக்குதல் நடத்தும். கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை தடுத்து அழிக்கும் திறன் பாட்ரியாட்டுக்கு இருந்தாலும், குறைந்தபட்ச உயரத்தில் பறந்து தாக்குதல் நடத்தும் ஏவுகணைகள், பாட்ரியாட்டின் ரேடார் கண்களில் மண்ணைத் தூவி விடும் என்று கூறப்படுகிறது.

-athirvu.in