அல்கொய்தாவினருக்கு பாகிஸ்தான் பயிற்சி அளித்ததாக இம்ரான் கான் ஒப்புதல்!

அல்கொய்தா மற்றும் பிற தீவிரவாத குழுக்களுக்கு பாகிஸ்தான் பயிற்சி அளித்ததாக முதல்முறையாக அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான் ஒப்புக் கொண்டுள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வெளிநாட்டு உறவுகளுக்கான கவுன்சில் (Council on Foreign Relations (CFR) )எனும் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் இம்ரான் கான் பேசினார்.

அப்போது அவர், இரட்டை கோபுர தகர்ப்புக்கு பிறகு, அமெரிக்காவுடன் கைகோர்த்தது பாகிஸ்தான் செய்த மிகப்பெரிய தவறுகளில் ஒன்று என்றார்.

அமெரிக்காவுடன் கைகோர்த்ததால் பாகிஸ்தானியர்கள் 70 ஆயிரம் பேர் உயிரிழந்து விட்டனர் என்று இம்ரான் கான் குறிப்பிட்டார். இந்த சூழ்நிலையில், ஆப்கனில் அமெரிக்கா வெற்றி பெறாததற்கு பாகிஸ்தான் மீது குற்றச்சாட்டு தெரிவிக்கப்படுவதாக இம்ரான் கான் குறிப்பிட்டார்.

ஆப்கனில் சோவியத் யூனியன் படைக்கு எதிராக சண்டையிட 1980ம் ஆண்டுகளில் பயிற்சி அளிக்கப்பட்ட குழுக்கள், பிறகு அமெரிக்காவால் தீவிரவாத குழுக்களாக முத்திரை குத்தப்பட்டு விட்டதாக அவர் கூறினார்.

ஆப்கனில் சண்டையிட அல்கொய்தா மற்றும் பிற குழுக்களைச் சேர்ந்தவர்களுக்கு பாகிஸ்தான் ராணுவமும், ஐஎஸ்ஐ உளவு அமைப்பும் பயிற்சி அளித்ததாகவும், ஆதலால் அவர்களிடையே தொடர்பு நிலவுகிறது என்றும் இம்ரான் கான் தெரிவித்தார்.

பாகிஸ்தானால் பயிற்சி அளிக்கப்பட்ட தீவிரவாதிகளுக்கு எதிராகவே நடவடிக்கை எடுக்கப்படுவதில், பாகிஸ்தானைச் சேர்ந்த அனைவருக்கும் உடன்பாடு கிடையாது என்றும், அதுதான் பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்கள் நடப்பதற்கு காரணம் என்றும் இம்ரான் கான் குறிப்பிட்டார்.

-athirvu.in