பிரெக்ஸிட் விவகாரத்தில் இங்கிலாந்து நாடாளுமன்றத்தை பிரதமர் போரிஸ் ஜான்சன் முடக்கி வைத்தது சட்டவிரோதம் என அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பிரெக்ஸிட் எனப்படும் ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தத்தில் இருந்து விலக இங்கிலாந்து முடிவு செய்தது. இதற்காக நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் அப்போதைய பிரதமர் தெரசா மே தோல்வியடைந்ததால் அவர் பதவி விலகினார்.
அவருக்குப் பின் பதவிக்கு வந்த போரிஸ் ஜான்சன் அரசுக்கு பிரக்ஸிட் விஷயத்தில் கெடு விதிக்கப்பட்டதால் முடிவு எடுக்கும் வரை நாடாளுமன்றத்தை முடக்கி வைக்க ராணி 2ம் எலிசபெத்திடம் பரிந்துரைத்தார். இதையடுத்து, அடுத்த மாதம் 14-ம் தேதி வரை, நாடாளுமன்றத்தை முடக்கிவைக்க, ராணி இரண்டாம் எலிசபெத் ஒப்புதல் வழங்கினார்.
இந்நிலையில், நாடாளுமன்றத்தை முடக்கும், பிரதமர் போரீஸ் ஜான்சனின் முடிவை எதிர்த்து, இந்திய வம்சாவளி எம்.பி., ஜினா மில்லர் , அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி பிரிண்டா ஹாலே தலைமையிலான 11 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தீர்ப்பளித்த நீதிபதிகள், நாடாளுமன்றத்தை முடக்கி வைக்க ராணிக்கு பரிந்துரைத்தது சட்டவிரோதம் என்று தெரிவித்தனர். உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் அந்நாட்டு அரசியலில் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
-athirvu.in