காஷ்மீரில் தீவிரவாதத் தாக்குதல்களை அரங்கேற்ற பாகிஸ்தான் தீவிரவாதிகள் சீனாவின் ஆளில்லா விமானம் மூலம் பஞ்சாப்புக்குள் வெடிபொருட்கள், ஆயுதங்களை கடத்துவது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து எல்லைப் பகுதியில் ராணுவம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் காலிஸ்தான் தீவிரவாதக் கும்பல்கள் கடந்த 6-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை 8 ட்ரோன்கள் 80 கிலோ எடையுள்ள ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்கள் பாகிஸ்தானில் இருந்து எல்லை கடந்து அனுப்பப்பட்டதை பஞ்சாப் போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கடந்த 6 -7-ஆம் தேதிகள் 9 -10-ஆம் தேதிகள் மற்றும் 15 – 16-ஆம் தேதிகளுக்கு இடைப்பட்ட இரவுகளில் டிரோன்கள், மூலம் ஆயுதங்கள், வெடிபொருட்கள், 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகள், இந்தியாவில் தடை செய்யப்பட்ட சாட்டிலைட் ஃபோன்கள் உள்ளிட்டவை ட்ரோன்கள் மூலம் கடத்தப்பட்டது தெரியவந்துள்ளது.
அனைத்து பொருட்களும் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. ஆதரவு காலிஸ்தான் ஜிந்தாபாத் தீவிரவாத இயக்கத்தின் ஜெர்மனி மற்றும் லாகூர் பிரிவு தீவிரவாதிகளின் கூட்டுத் திட்டத்தின் பேரில் அனுப்பப்பட்டதும், அதன் மூலம் காஷ்மீரில் தீவிரவாதத் தாக்குதல்களை அரங்கேற்ற சதித் திட்டமிட்டதும் தெரியவந்துள்ளது.
கடந்த 22-ஆம் தேதி பஞ்சாபின் தரதரன் மாவட்டத்தில் உள்ள சோலா சாஹிப் (Chohla Sahib) என்ற கிராமத்தில் வாகன் சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் மாருதி ஸ்விஃப்ட் கார் ஒன்றை சோதனையிட்ட போது அதில் இருந்து பல்வேறு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.
அப்போது சுப்தீப், மான்சிங், ஆகாஷ்தீப் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ட்ரோன்கள் மூலம் ஆயுதங்கள் கடத்தப்படுவது தெரியவந்தது. பஞ்சாப் போலீசார், மத்திய பாதுகாப்பு முகமை, எல்லைப் பாதுகாப்புப் படை, இந்திய விமானப்படை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
முதல் கட்ட விசாரணையில் 10 கிலோ எடையுள்ள பொருட்களை எடுத்துச் செல்லும் திறனுடைய சீன ட்ரோன்கள் மூலம் 8 முறை எல்லை நெடுகிலும் ஆயுதங்கள் கடத்தப்படுத்தப்படுவது தெரியவந்துள்ளது. எல்லைக்கப்பால் பாகிஸ்தானின் 2 கிலோமீட்டர் சுற்றுவட்டாரத்துக்குள் இருந்து ஏவப்படும் இந்த டிரோன்கள் 5 கிலோமீட்டர் தூரம் பயணித்து இந்திய எல்லைக்குள் ஆயுதங்களை கடத்தி வருவதும் தெரியவந்துள்ளது.
2000 மீட்டர் உயரத்தில் பறக்க விடப்படும் இந்த டிரோன்கள் இந்திய எல்லைக்குள் வந்ததும் 1200 மீட்டர் உயரத்துக்கு தாழ்ந்து அங்கிருந்து மலையேறும் கயிறுகள் மூலம் ஆயுதங்கள் வெடி பொருட்களை நிலத்தில் சரியவிடுவது தெரியவந்துள்ளது.
இப்படியாக சுமார் 80 கிலோ எடை அளவு கொண்ட ஆயுதங்கள் கடத்தப்பட்டுள்ளதும், இதற்கு பயன்படுத்தப்பட்ட டிரோன் சீன தயாரிப்பு என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாபின் ஃபெரோஸ்பூர் மாவட்டத்திலும் டிரொன்களின் நடமாட்டம் தென்பட்டது தெரியவந்ததையடுத்து இந்திய விமானப்படை மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையினர் டிரோன்கள் மூலம் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் குறித்தும் அச்சம் தெரிவித்துள்ளனர்.
பஞ்சாப் போலீசார் தாழ் நிலை ரேடார்கள் மூலம் ட்ரோன்களை கண்காணித்து அவற்றை அழிக்குமாறு அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதே போல் ராணுவமும் எல்லையில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது.
-athirvu.in