பிரிட்டன் பிரதமர் பதவியில் போரீஸ் ஜான்சன் நீடிப்பது கேள்விக்குறி!

பிரிட்டன் நாடாளுமன்றம் முடக்கி வைக்கப்பட்டிருப்பதை உச்சநீதிமன்றம் சட்டவிரோதம் என்று அறிவித்திருப்பதால், பிரதமர் பதவியில் போரீஸ் ஜான்சன் ((Boris Johnson)) நீடிப்பது கேள்விக்குறியாகியுள்ளது.

பிரெக்ஸிட் விவகாரத்தில் தொடர்ந்து முட்டுக்கட்டை ஏற்பட்டு வந்ததால், நாடாளுமன்றத்தை போரீஸ் ஜான்சன் முடக்கி வைத்தார். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், பிரிட்டன் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதில் பிரிட்டன் நாடாளுமன்ற முடக்கத்தை சட்டவிரோதம் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. இதனால் பிரதமர் பதவியில் போரீஸ் ஜான்சன் நீடிப்பது கேள்விக்குறியாகியுள்ளது.

நாடாளுமன்ற முடக்கத்தில் பிரிட்டன் ராணி எலிசபெத்தை தவறாக வழிநடத்திய காரணத்துக்காக பிரதமர் பதவியிலிருந்து போரீஸ் ஜான்சன் ராஜிநாமா செய்ய வேண்டுமென எதிர்க்கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர். எனினும், ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் கலந்து கொள்ள நியூயார்க் சென்றுள்ள போரீஸ் ஜான்சன், எது நடந்தாலும் அக்டோபர் மாதம் 31ஆம் தேதிக்குள் ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் வெளியேறியே தீரும் என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து, ராணி எலிசபெத்தை தொலைபேசியில் போரீஸ் ஜான்சன் தொடர்பு கொண்டு பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அதன் விவரம் வெளியிடப்படவில்லை.

-athirvu.in