பெய்ஜிங் அருகே நட்சத்திர மீன் வடிவிலான அதிநவீன சர்வதேச விமானநிலையம் திறப்பு!

சீன தலைநகர் பெய்ஜிங் அருகே நட்சத்திர மீன் வடிவில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விமான நிலையத்தை அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார்.

ஹெபை((Hebei)) மாகாணத்தில் லாங்ஃபாங்((Langfang)) என்ற நகரத்தில் 173 ஏக்கரில் கிட்டத்தட்ட 100 கால்பந்து மைதானத்தின் அளவுக்கு அதிநவீன பெய்ஜிங் டாக்ஸிங் விமானநிலையம் உருவாக்கப்பட்டுள்ளது. பெய்ஜிங் முதன்மை விமானநிலையத்தில் நிரம்பி வழியும் பயணிகளை சமாளிக்கும் பொருட்டு அங்கிருந்து 45 கிலோ மீட்டர் தூரத்தில் இந்திய மதிப்பில் 4 லட்சம் கோடி செலவில் இந்த புதிய விமானநிலையம் அமைக்கப்பட்டுள்ளது. 4 ஓடுதளங்களையும் 268 வாகன நிறுத்தும் இடங்களையும் 143 ஹெக்டேரில் முனையத்தையும் கொண்டுள்ளது. பசுமையான முறையில் அமைக்கப்பட்டுள்ள இந்த விமானநிலையம், ராணுவப் பயன்பாட்டுக்கும் உதவ உள்ளது.

நடைபாதை குறைவு, சுற்றுவட்டாரம் முழுவதும் 5ஜி சேவை என 103 புதிய வடிவமைப்புகளையும் 65 புதிய தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி உலக தரத்தில் பெய்ஜிங் டாக்ஸிங் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. முனையத்துக்கு அடியில் ரயில் நிலையம் மற்றும் மெட்ரோ பாதை உள்ளது. இதன்மூலம் பயணிகள் 20 நிமிடங்களில் நகரத்துக்குள் செல்ல முடியும்.

2022 ஆம் ஆண்டுக்குள் 4 கோடியே 50 லட்சம் பயணிகளையும் 2025 ஆம் ஆண்டுக்குள் 7 கோடியே 20 லட்சம் பயணிகளையும் நிர்வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2030 ஆம் ஆண்டுக்குள் அமெரிக்காவை விட உலகின் மிகப்பெரிய விமான நிலையமாக இது மாறும் என்று சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது.

-athirvu.in