சீனாவின் தேசிய தினம்: ஆயுத வலிமையை வெளிக்காட்டும் வகையில் நடந்த பேரணி

சீனப் புரட்சியின் 70-வது ஆண்டு விழாவை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்ட பேரணியில் அறிவுத் திறன் மிக்க ஆயுதங்கள், கட்டளை வலைப் பின்னல் ஆகியவை கொண்டு செல்லப்பட்டன.

நாட்டின் டிஜிடல் புரட்சியில் சீனாவின் மக்கள் விடுதலை ராணுவத்தின் பங்கை எடுத்துக்காட்டும் வகையில் அது அமைந்திருந்தது. மக்கள் விடுதலை ராணுவத்தை சீரமைத்து மறுகட்டுமானம் செய்து உலகத் தரமான ராணுவமாக ஆக்குவதற்கு 2015ல் அதிபர் ஷி ஜின்பிங் எடுத்துள்ள முயற்சி நிறைவேறுவது என்பது 2049 வரை நீடிக்கப் போகும் நீண்ட கால நடைமுறை என்கிறார் இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்ட்ரேடஜிக் ஸ்டடியை சேர்ந்த அலெக்ஸாண்டர் நெல்.

சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் பெரும் ஆதிக்கம் செலுத்திவரும் சீனாவின் கதை 20ஆம் நூற்றாண்டின் அளப்பரிய வெற்றிக் கதைகளில் ஒன்று.

பல தலைமுறைகளாக இருந்த மன்னராட்சி மற்றும் பல்லாண்டுகள் நிகழ்ந்த உள்நாட்டுப் போர் ஆகியவற்றுக்குப் பிறகு சீனப் புரட்சியை நிகழ்த்திய அந்நாட்டு கம்யூனிஸ்ட் கட்சி ஒப்பீட்டளவில் மிகவும் குறுகிய காலத்தில் சீனாவை உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரம் ஆக்கியுள்ளதுடன், அனைத்து துறைகளிலும் அமெரிக்காவுக்கு போட்டியாக விளங்கும் நாடாக மாற்றியுள்ளது.

சீனப் புரட்சிபடத்தின் காப்புரிமைLINTAO ZHANG
Image captionபொருளாதாரத்தில் மட்டுமல்லாது ராணுவ பலம் மூலமும் சர்வதேச அரசியலில் பெரும் சக்தியாக உள்ளது சீனா. (கோப்புப்படம்)

இன்று ‘சீன மக்கள் குடியரசு’ குடியரசு பிறப்பதாக மாவோ சே துங், பெய்ஜிங்கின் தியானன்மென் சதுக்கத்தில் நடந்த நிகழ்வில் அறிவித்ததன் 70வது ஆண்டு விழா. 1949 அக்டோபர் 1 அன்று சமகால வரலாற்றில் மிகவும் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாகக் கருதப்படும் அந்த நிகழ்வு நடந்தது.

அக்டோபர் 1 ஏன் சீனாவில் தேசிய தினமாக கொண்டாடப்படுகிறது?

மாவோ சே துங் தலைமையிலான சீன கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அப்போது ஆட்சியில் இருந்த குவோமிண்டாங் (தேசியவாத) கட்சி இடையே இரண்டாம் உலகப்போர் சமயத்தில் அமைதி உடன்படிக்கை ஏற்பட்டிருந்தாலும், போர் முடிந்த பின் மீண்டும் மோதல் வெடித்தது.

பின்னர் அங்கு நடந்த உள்நாட்டுப் போரில் சியாங் கை-ஷேக் தலைமையிலான குவோமிண்டாங் தரப்பு தைவான் தீவில் தஞ்சமடைந்தது. அங்கு சீன குடியரசை நிறுவிய சியாங் கை-ஷேக் தனது தரப்புதான் உண்மையான சீன அரசு என்று கூறினார். இன்றும் தைவானின் அலுவல்பூர்வ பெயர் ‘சீனக் குடியரசு’ என்பதுதான். சீனாவின் அலுவல்பூர்வ பெயர் ‘மக்கள் சீனக் குடியரசு.’

Chairman Mao Zedong

இதை மாவோ நிறுவிய நாள்தான் சீனாவில் தேசிய தினமாக ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது.

China at 70படத்தின் காப்புரிமைREUTERS

இன்றைய கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பெய்ஜிங்கில் நடக்கும் அணிவகுப்பில் தனது ராணுவ வல்லமையை பறைசாற்றி வருகிறது சீனா. வியக்க வைக்கும் அளவுக்கு வெற்றி கண்டுள்ள சீனா பற்றிய விமர்சனப் பார்வைகளும் உள்ளன. அவற்றை விவரிக்கிறது இந்தக் கட்டுரையின் பின்வரும் பகுதி.

மனித உரிமை மீறல்

எழுபது ஆண்டுகளாக ஒரு கட்சி ஆட்சி நீடிக்கும் சீனா, உலகிலேயே மனித உரிமை மீறல்கள் அதிகமாக நடக்கும் நாடுகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

அரசை கடுமையாக எதிர்ப்பவர்கள் மற்றும் விமர்சிப்பவர்களை சிறையில் அடைப்பதைப் பற்றி சீன அரசு கவலை கொள்வதில்லை.

ஷி ஜின்பிங்படத்தின் காப்புரிமைGETTY IMAGES
Image captionமாவோவுக்கு பிறகு அதிக அதிகாரம் மிக்க அதிபராக தற்போதைய அதிபர் ஷி ஜின்பிங் விளங்குகிறார். இருமுறை மட்டுமே ஒருவர் அதிபராக இருக்க முடியும் என்ற கட்டுப்பாடு இவரது ஆட்சியில் நீக்கப்பட்டது.

ஷிங்ஜியாங் மாகாணத்தில் வசிக்கும் பல்லாயிரம் வீகர் இன முஸ்லிம்களை தடுப்பு முகாம்களில் அந்நாட்டு அரசு அடைப்பது சமீபத்தில் சர்வதேச விமர்சனங்களை ஈர்த்தது. அது தீவிரவாதம் பரவாமல் தடுக்கும் முயற்சி என்கிறது சீன அரசு.

ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக்கொள்ளக்கூடாது என்று சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சீன அரசு தடை விதித்தது.

மக்கள்தொகையில் முதியவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வேலை செய்யும் வயதினர் குறைவதால் 2015இல் அந்த விதியைத் தளர்த்தியது சீனா.

ஹாங்காங் பிரச்சனை

சீனப் புரட்சியின் 70வது ஆண்டுவிழாவை எதிர்மறையாக எதுவும் நடக்காமல் கொண்டாட நினைத்தது சீனா.

ஆனால், ஹாங்காங் அரசு சமீபத்தில் நிறைவேற்ற முயன்ற குற்றப்பின்னணி உடையவர்களை சீனாவுக்கு நாடுகடத்தும் சட்ட மசோதா, ஹாங்காங் அரசு மற்றும் சீனாவுக்கு எதிரான போராட்டங்களைத் தூண்டியது. அதனால் ஹாங்காங் அரசு அந்தச் சட்ட வரைவை விலக்கிக்கொண்டது.

Hong Kongபடத்தின் காப்புரிமைREUTERS

இன்று காலை பெய்ஜிங்கில் சீன அரசு கொண்டாடிக்கொண்டிருந்த சமயத்தில் ஹாங்காங்கில் சீன எதிர்ப்பு போராட்டங்கள் நடந்தன.

1898 முதல் பிரிட்டனால் 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுக்கப்பட்டிருந்த ஹாங்காங், 1997இல் சீனாவுடன் இணைந்தது. எனினும், ‘ஒரு நாடு இரு அமைப்பு முறை’ எனும் கொள்கையின்படி, சட்டம் இயற்றல், நிர்வாகம் உள்ளிட்டவற்றில் ஹாங்காங் தன்னாட்சி அதிகாரங்களைப் பெற்றுள்ளது.

இந்தத் தன்னாட்சி உரிமை 2047இல் முடிவுக்கு வரவுள்ளது. எனினும், இது எப்போதும் தொடர வேண்டும் என்றும், ஹாங்காங் இன்னொரு சீன நகரத்தைப் போல் ஆகிவிடக்கூடாது என்றும் அந்த நகர மக்கள் விரும்புகின்றனர்.

பனிப்போர் கால மனநிலையை உண்டாக்கும் அணு ஆயுதங்கள்

இன்றைய அணிவகுப்பில் அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் உடைய ஏவுகணைகள் மற்றும் உபகரணங்களை சீனா காட்சிப்படுத்தியது.

கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த தென்சீனக் கடல் உள்ளிட்ட பகுதிகளில் அமெரிக்காவின் ஆதிக்கத்தைத் தடுக்கும் நோக்கில், அணு ஆயுதங்களை சுமந்து செல்லக்கூடிய DF26 போன்ற ஏவுகணைகள் இன்று அணிவகுப்பில் பங்கேற்றன.

Chinaபடத்தின் காப்புரிமைCGTN

இத்தகைய ஆயுதங்கள் அமெரிக்கா மற்றும் சோவியத் ஒன்றியம் இடையே நடந்த பனிப்போர் கால மனநிலையை இப்போது அமெரிக்கா மற்றும் சீனா இடையே உருவாக்குகின்றன.

பசிபிஃக் பெருங்கடலின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள அமெரிக்க பிராந்தியமான குவாம் தீவின் பாதுகாப்பு இப்போது சீனாவின் கூடுதல் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.

பொருளாதார மந்தநிலை

அமெரிக்கா உடனான வர்த்தகப் போரால் சீனா அமெரிக்காவுக்கு மேற்கொண்ட ஏற்றுமதிகள் குறைந்துள்ளன.

பொருளாதார சீர்திருத்தங்கள் மூலம் பல கோடி மக்களை, குறுகிய காலத்தில் வறுமையில் இருந்து மீட்ட சீனாவின் உள்நாட்டு பொருளாதாரமும் முன்பு அளவுக்கு வலிமையாக இல்லை.

சீன உற்பத்திகளுக்கான சர்வதேச சந்தைத் தேவை குறைந்து வருவதால், பொருளாதார வளர்ச்சி விகிதமும் சரிந்து வருகிறது.

China's economyபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

தாய்லாந்து, லாவோஸ், கம்போடியா, மியான்மர் போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளில் முதலீடு செய்வதில் சீனா கவனம் செலுத்தி வருகிறது.

மலேசியா, பிலிப்பைன்ஸ், இந்தோனீசியா ஆகிய முக்கிய தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மிகப்பெரிய வர்த்தகக் கூட்டாளியாக சீனா உள்ளது.

இத்தனை சிக்கல்கள் மற்றும் விமர்சனங்களுக்கு நடுவிலும், சில ஆண்டுகளுக்கு முன் வளரும் நாடக இருந்த சீனா இன்று அமெரிக்காவின் சர்வதேச வல்லாண்மைக்கு சவால்விடும் திறன் உடைய ஒரே உலக நாடக இருப்பது இப்போதைக்கு சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது.

-BBC_Tamil