ஹாங்காங் போராட்டங்களில் முகமூடி அணியத் தடை: கிளர்ந்தெழுந்த மக்கள், வெடித்த போராட்டம்

ஹாங்காங்கில் போராட்டங்களில் முகமூடி அணியத் தடை விதித்ததை எதிர்த்து அரசுக்கு எதிராக மக்கள் மேற்கொண்ட பேரணி வன்முறையில் முடிந்துள்ளது.

அரசு அலுவலகங்கள், மெட்ரோ ரயில் நிலையம், சீனாவுடனான வணிகத் தொடர்புகள் வைத்திருக்கும் அலுவலகங்கள் ஆகியவற்றின் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் தொடுத்தனர்.

போராட்டக்காரர்கள் மீது போலீஸார் கண்ணீர் புகைகுண்டுகளைப் பயன்படுத்தினர். தண்ணீர் பீய்ச்சி அடித்தனர். இதில் பலர் காயமடைந்தனர்.

போராட்டக்காரர்கள் அணிந்திருந்த முகமூடிகளைக் கழற்றி அவர்களைக் கைது செய்தனர்.

மழையையும் பொருட்படுத்தாமல் லட்சக்கணக்கான பேர் இந்த பேரணியில் முகமூடி அணிந்து கலந்து கொண்டனர்.

போராட்டக்காரர்கள் முகமூடி அணிய நீதிமன்றமும் தடை விதித்திருந்தது.ஹாங்காங்கில் போராட்டங்களில் முகமூடி அணியத் தடை விதித்ததை எதிர்த்து அரசுக்கு எதிராக மக்கள் மேற்கொண்ட பேரணி வன்முறையில் முடிந்துள்ளது.

பிபிசி செய்தியாளர் கூறுவதென்ன?

பிபிசி செய்தியாளர் கூறுவதென்ன?படத்தின் காப்புரிமைEPA

முகங்களை முழுவதுமாக மூடும் முகமூடிகளுக்கும் தடை விதிக்கும் அவசரநிலை சட்டத்தை எதிர்த்து ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் குதித்தனர் என்கிறார் பிபிசி செய்தியாளர் ராபர்ட் ப்ராண்ட்.

‘ஹாங்காங் எதிர்க்கும்’ என்று கோஷம் எழுப்பியவாறு ஹாங்காங்கின் மையப் பகுதிக்கு முகமூடி அணிந்து மக்கள் அமைதியாகச் சென்றனர்.

போராட்டங்களில் நிஜத் துப்பாக்கி குண்டுகள் பயன்படுத்தப்படுவதை எதிர்த்தும் இந்தப் பேரணி மேற்கொள்ளப்பட்டது.

கடந்த வாரம் நடந்த போராட்டத்தில்உண்மையான குண்டுகளைப் பயன்படுத்தியதால் இரண்டு பேர் காயமடைந்தனர்.

பேரணியைத் தடுக்க போலீஸார் போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகைகுண்டுகளை வீசினர்.

போராட்டம் வெடிக்குமென எதிர்பார்த்த வணிகர்கள் அந்தப் பகுதியிலிருந்த கடைகளை அடைத்திருந்தனர்.

போராட்டக்காரர்கள் என்ன சொல்கிறார்கள்?

எங்களின் போராட்டம் அரசின் நிலைப்பாட்டில் தாக்கம் செலுத்தும் என நான் நினைக்கவில்லை. ஆனால் எங்களின் பிரச்சனையை சர்வதேச சமூகத்துக்கு எடுத்துச் செல்ல நாங்கள் போராடுகிறோம் என்கிறார் போராட்டத்தில் முகமூடி அணிந்து கலந்து கொண்ட ஹசெல் சென்.

எனக்கு இந்த போராட்டத்தின் மீது நம்பிக்கை இல்லை. எங்களது நியாயமான பல கோரிக்கைகளை அரசு புறந்தள்ளிவிட்டது. ஆனால், எனக்கு வேறு வழியில்லை. என் உணர்வுகளை வெளிப்படுத்த போராடுவதைத் தவிர வேறு வழியில்லை என்கிறார் 19 வயதான ரிலே.

அரசு என்ன சொல்கிறது?

எங்களால் வன்முறையைத் தாங்கிக் கொள்ள முடியாது என்கிறார் ஹாங்காங் தலைவர் கேரி லேம்.

முகமூடி அணிவதற்கு எதிரான சட்டத்தை நியாயப்படுத்திய கேரி, தீவிர வன்முறையை தடுப்பதற்கான வழி இது என்கிறார்.

ஆனால், முகமூடி அணியத் தடை விதிப்பது அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்கிறார்கள் போராட்டக்காரர்கள்.

இது எங்களுக்கான அடிப்படை உரிமைகளைத் தடுப்பதாகக் கூறுகிறார்கள் அவர்கள்.  -BBC_Tamil