ஈரானுடன் பதற்றத்தை தணிக்க உதவுமாறு கேட்டுக்கொண்ட சவுதி அரேபியா!

எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீதான தாக்குதலையடுத்து நிலவும் பதற்றமான சூழலை தவிர்ப்பது தொடர்பாக ஈரானுடன் பேசுமாறு ஈராக் மற்றும் பாகிஸ்தானை சவுதி அரேபியா கேட்டுக் கொண்டுள்ளது.

சவுதி அரேபியாவின் அரம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது கடந்த செப்டம்பர் 14ம் தேதி, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆளில்லா விமானம் மூலம் வான்வழி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலால் உற்பத்தி பாதிக்கப்பட்டு, உலகளவில் கச்சா எண்ணெய் விநியோகத்திலும் பாதிப்பை ஏற்பட்டது.

இந்த தாக்குதலுக்கு ஈரானே காரணம் என சவுதி மற்றும் அமெரிக்கா குற்றம்சாட்டியதுடன், பதிலடி கொடுக்கப்படும் என்றும் எச்சரித்தன. இந்நிலையில், இந்த பிரச்சனையில் ஈராக் மற்றும் பாகிஸ்தான் நாட்டு தலைவர்கள் தலையிடுமாறு சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் கேட்டுக் கொண்டதாக நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் கூறியுள்ளது.

பதற்றத்தை தணிப்பது தொடர்பாக ஈரானுடன் பேசுமாறு, இரு நாட்டு தலைவர்களையும் சவூதி பட்டத்து இளவரசர் சல்மான் கேட்டுக் கொண்டுள்ளதாக அந்த நாளிதழ் குறிப்பிடப்பட்டுள்ளது. போரைத் தவிர்க்க வேண்டும் என தாம் விரும்புவதாகவும், ஈரானுடன் பேசுங்கள் என்றும் இம்ரான்கானிடம் சவூதி அரேபிய இளவரசர் கூறியதாகவும் நியூயார்க் டைம்ஸ் கூறியுள்ளது.

கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி ஈராக் பிரதமர் அப்துல் மஹதி சவூதி அரேபியா சென்றிருந்தபோதும், இதே கோரிக்கையை அந்நாட்டு பட்டத்து இளவரசர் விடுத்ததாகவும் நியூயார்க் டைம்ஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள ஈரான், தனிப்பட்ட முறையிலும், பகிரங்கமாகவும் சவூதி அரேபியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக கூறியுள்ளது.

-athirvu.in