துருக்கி – சிரியா தாக்குதல்: அதிகரிக்கும் உயிரிழப்புகள் – எல்லையில் என்ன நடக்கிறது?

வட சிரியாவில் குர்து இன போராட்டக்காரர்கள் மீது துருக்கி எல்லையைத் தாண்டி நடத்தும் தாக்குதலில் உயிரிழப்புகள் அதிகரிக்கின்றன.

இதுவரை பொதுமக்களில் சுமார் 11 பேர் உயிரிழந்துள்ளனர். அதோடு குர்துக்கள் வழி நடத்தும் சிரிய ஜனநாயகப் படைகள் மற்றும் துருக்கி ஆதரவு பிரிவுகளிலிருந்தும் டஜன் கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

துருக்கிய படைகளில் ஒருவர் உயிரிழந்துள்ளதை அந்நாட்டு ராணுவம் உறுதி செய்துள்ளது.

துருக்கி - சிரியா தாக்குதல்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

சர்வதேச அளவில் இந்த தாக்குதல் கண்டிக்கப்படும் நிலையில், பத்தாயிரம் பேர் தங்களுடைய வீடுகளிலிருந்து வெளியேறியுள்ளனர்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அமெரிக்க படைகளை அப்பகுதியில் இருந்து திரும்பப் பெற்றதையடுத்து, கடந்த புதன்கிழமை அன்று துருக்கி ராணுவம் வட சிரியாவுக்குள் நுழைந்தது.

அமெரிக்க படைகள் திரும்பப் பெறப்பட்டதையடுத்து, எல்லைத் தாண்டி தாக்குதல் நடத்த துருக்கிக்கு அமெரிக்கா அனுமதி அளித்தது போல் உள்ளது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில், அமெரிக்க குடியரசு கட்சியினர் துருக்கிக்கு எதிராக பொருளாதாரத் தடை மசோதாக்களை அறிமுகப்படுத்தப் போவாதாகக் தெரிவித்துள்ளனர்.

சிரிய அகதிகளுக்கான பாதுகாப்பு பகுதியை உருவாக்குவதற்கே இந்தத் தாக்குதல் என துருக்கி தன் நடவடிக்கைகளை நியாயப்படுத்தியுள்ளது.

துருக்கிக்கு எதிரான கிளர்ச்சியை சிரிய ஜனநாயக படைகளின் குர்து இன கிளர்ச்சியாளர்கள் கிளப்புவதாக அந்நாடு குற்றம் சாட்டுகிறது. மேலும் இதனால் இந்த கிளர்ச்சியாளார்களை துருக்கி பயங்கரவாதிகள் என குறிப்பிடுகின்றது.

ஐஎஸ் அமைப்புக்கு எதிராக அமெரிக்க நடத்தி வரும் போரில், சிரிய ஜனநாயக படைகள் ஒரு முக்கிய பங்கை வகித்தது.

குடிமக்கள் வெளியேறுதல்படத்தின் காப்புரிமைEPA

மேலும் அப்பகுதியில் குர்து படைகள் பாதுகாக்கும் வெளிநாட்டவர்கள் உள்பட பல சந்தேகத்துக்குட்பட்ட ஐஎஸ் கைதிகளின் நிலை குறித்து சர்வதேச அமைப்புகளுக்கு ஒரு முக்கிய கவலையாக இருக்கிறது.

இந்த தாக்குதலில் குர்து இன கிளர்ச்சியாளர்கள் துருக்கிய சார்பு படைகள் மற்றும் பொதுமக்கள் என பலர் இறந்துள்ளனர். பொதுமக்களில் சுமார் 11 பேர் இறந்துள்ளனர். 28 பேர் காயமடைந்துள்ளனர். இதில் சிலர் குழந்தைகள்.

துருக்கி எல்லை பகுதிகளில் 5 பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. துருக்கி ராணுவத்தில் 3 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக துருக்கி உறுதிபடுத்தியுள்ளது.

துருக்கி இந்த பாதுகாப்பு பகுதிக்காக சிரியாவின் எல்லைப்பகுதியை நோக்கி 480 கிலோமீட்டர் வந்துள்ளது. ஆனால் திட்டமிடப்பட்ட 32 கிலோமீட்டருக்கு மேல் உள்ளே செல்ல மாட்டோம் என கூறியுள்ளது.

-BBC_Tamil