சரவாக் எம்டியுசி, செனட்டர்களைச் சந்தித்த  தேசிய எம்டியுசி தலைவர்களைச் சாடியது

மலேசிய தொழிற்சங்கக் காங்கிரசுக்குள் விரிசல்கள் விரிவடைந்து வருகின்றன. சரவாக் எம்டியுசி செயலாளர் எண்ட்ரு லோ, 1967 தொழிலாளர் உறவுச் சட்ட (ஐஆர்ஏ)த்துக்குத் திருத்தம் கொண்டுவரும் சட்டவரைவு தொடர்பில் மேலவை உறுப்பினர்களைச் சந்தித்துப் பேசிய எம்டியுசி தலைவரையும் தலைமைச் செயலாளரையும் சாடியிருப்பது அதற்கு ஓர் அறிகுறியாகும்.

“தலைவர் அப்துல் ஹாலிமும் தலைமைச் செயலாளர் ஜே.சாலமனும் எம்டியுசிமீதும் தொழிலாளர்கள்மீதும் அவர்களின் சொந்த கருத்துகளைத் திணிப்பது கண்டு சரவாக் எம்டியுசி வருத்தம் கொள்கிறது”, என லோ இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.

எம்டியுசி தலைவர்கள், டேவான் நெகரா தொழிலாளர் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வதற்காக நேற்று தேசிய செனட் மன்ற உறுப்பினர்களைச் சந்தித்துப் பேசினார்கள். தொழிலாளர் சட்டத்துக்குக் கொண்டுவர உத்தேசிக்கப்பட்டுள்ள திருத்தங்கள் எம்டியுசிக்கு ஏற்புடையவை அல்ல என்பது அவர்களின் கருத்து.

உத்தேச தொழிலாளர் சட்டத் திருத்த மசோதாவை நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்யக் கூடாது, அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தில்தான் சமர்பிக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர்கள், அதற்கு முன்னதாக அது தேசிய தொழிலாளர் ஆலோசனை மன்றக் கூட்டத்தின் பரிசீலனைக்கு அனுப்பப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.

இந்த விசயத்தில் சரவாக் எம்டியுசியின் கருத்து எம்டியுசி தலைமையின் கருத்துக்கு நேர்மாறானது என லோ கூறினார். ஐஆர்ஏ திருத்தச் சட்டம் தொழிலாளர் நிலை மேம்பட உதவும் என்றும் அது தொழிலாளர்களுக்குள்ள ஒன்றுகூடும் உரிமையை வலியுறுத்தும் அனைத்துலக தொழ்லிலாளர் நிறுவனச் சட்டம் அங்கீகரிக்கப்படவும் வழிவகுக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்..