சத்ய நாதெல்ல: மோடியின் குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றி மைக்ரோ சாஃப்ட் சிஇஓ பேசிய கருத்து சர்ச்சையாகிறது

நரேந்திர மோடி அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக பேசி தீவிர வலதுசாரிகளின் தாக்குதல்களுக்கு ஆளாகி வருகிறார் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெல்ல.

பஸ்ஃபீட் இணையதளம் சத்ய நாதெல்லவிடம் நடத்திய நேர்க்காணலின் போது, இந்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், “இந்தியாவில் நடந்து கொண்டிருப்பவை வருத்தம் அளிக்கின்றன. அது தவறு. இந்தியாவுக்கு வரும் ஒரு வங்கதேச குடியேறி இந்தியாவில் மிகப்பெரிய வர்த்தகத்தை உருவாக்குகிறவராகவோ அல்லது இன்ஃபோசிஸின் அடுத்த தலைமை செயல் அதிகாரியாக வரவேண்டும் என்றோ நான் விரும்புகிறேன்” என்று பஸ்ஃபீட்டின் தலைமை ஆசிரியர் பென் ஸ்மித் கேள்விக்கு பதில் அளித்திருந்தார் சத்ய நாதெல்ல.

சத்ய நாதெல்லவிடம் தான் கேட்ட கேள்வியையும், பதிலையும் பென் ஸ்மித் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தவுடன் செய்தி வைரலானது.

இணையத்தில் தீவிர வலதுசாரிகள் சத்ய நாதெல்ல கருத்துக்கு எதிராகப் பதிவு செய்துவருகின்றனர். தொடர்ந்து, சத்ய நாதெல்லவின் விளக்கத்தை மைக்ரோசாஃப்ட் இந்தியாவின் அதிகாரபூர்வ ட்விட்டர் பகிர்ந்தது.

அந்த பதிவில், எல்லா நாடுகளும் தமது எல்லைகளை வரையறுக்க வேண்டும் என்றும், தேசிய பாதுகாப்பையும், குடியேற்ற கொள்ளைகளையும் உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்றும் நாதெல்ல குறிப்பிட்டுள்ளார்.

ஜனநாயகத்தில் இதுபோன்ற வரைமுறைகளை அரசாங்கங்கள் விவாதங்களை நடத்தி எல்லைகளை வரையறுத்து கொள்ளும் என்று குறிப்பிட்ட சத்ய நாதெல்ல, இந்திய பாரம்பரியத்தாலும், பன்முக கலாசாரம் உள்ள இந்தியாவில் வளர்ந்ததாலும், அமெரிக்காவில் ஒரு குடியேறியாகப் பெற்ற அனுபவத்தாலும் தாம் வார்த்தெடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “இந்தியா குறித்து என்னுடைய நம்பிக்கை என்னவெனில் ஒரு குடியேறியால் வளமான ஸ்டார்ட்-அப் நிறுவனத்தை உருவாக்கவோ அல்லது இந்திய பொருளாதாரத்துக்கும் இந்திய சமூகத்துக்கும் நன்மை பயக்கும் வகையில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தை வழிநடத்தவோ முடியும்” என்று மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

நாதெல்லாவை வறுத்தெடுக்கும் வலதுசாரிகள்

சத்ய நடெல்லாவால் ட்விட்டரில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இந்தியளவில் டிரெண்டாகி வருகிறது. இச்சூழலில், சத்ய நடெல்லாவை வலதுசாரிகளும், பாஜக ஆதரவாளர்களும் கடுமையாக சாடி கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.

பாஜக எம்பி மீனாக்ஷி லேகி தனது ட்விட்டர் பக்கத்தில், படித்தவர்கள் கல்வி அறிவு பெற வேண்டும் என்பதற்கான சிறந்த எடுத்துகாட்டு இது என்று சத்ய நாதெல்லாவைநையாண்டி செய்துள்ளார்.

அதேசமயம், சத்ய நாதெல்லாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்தும், வலதுசாரி பயனர்களை கேலி செய்யும் விதமாக மீம்களும் பகிரப்பட்டு வருகின்றன.