“லோக்பால் என்பது இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தேசிய பிரச்னை. இது தொடர்பாக எங்களுடன் பேச வேண்டும் என அரசு தரப்பு விரும்பினால் தலைமையமைச்சர் மன்மோகன் சிங் அல்லது ராகுல் உள்ளிட்டோர்தான் பேச்சு நடத்த வர வேண்டும்” என மத்திய அரசுக்கு அண்ணா ஹசாரே குழு கெடு விதித்துள்ளது.
ஊழலுக்கு எதிராக காந்தியவாதி அண்ணா ஹசாரே நடத்தி வரும் உண்ணாநோன்பு போராட்டம் நேற்றும் தொடர்ந்தது. ஹசாரே குழுவினருடன் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளை தீர்ப்பதற்கு மகாராஷ்டிர மாநில அதிகாரி உமேஸ் சந்திரா சாரங்கி, ஆன்மிக தலைவர் பையூஜி மகாராஜ் ஆகியோரை பேச்சுவார்த்தை நடத்துவதற்கான பிரதிநிதிகளாக இந்திய மத்திய அரசு அனுப்பி வைத்தது.
இவர்கள் அண்ணா ஹசாரே குழுவினருடன் திரைமறைவில் பேச்சு நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மத்திய அரசு சார்பில் அனுப்பப்பட்டுள்ள பிரதிநிதிகள் குறித்து ஹசாரே குழுவினர் அதிருப்தி தெரிவித்ததுடன் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை இடம்பெறுவதாக கூறப்படுவதை முற்றாக மறுத்தனர்.
இதுகுறித்து ஹசாரே ஆதரவாளர்கள் கூறியதாவது: “பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மத்திய அரசு சார்பில் தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ள பிரதிநிதிகள் மீது எங்களுக்கு திருப்தி இல்லை. லோக்பால் என்பது ஒட்டுமொத்த நாட்டு மக்களும் பெரிதும் எதிர்பார்க்கும் தேசிய பிரச்னை. எனவே, இது தொடர்பாக ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளை தீர்ப்பதற்கு முக்கிய பொறுப்பு வகிப்பவர்கள்தான் பேச்சு நடத்துவதற்கான பிரதிநிதிகளாக நியமிக்கப்பட வேண்டும்.”
“மாநில அளவிலான அதிகாரிகளை பேச்சுவார்த்தைக்கு அனுப்புவது நியாயம் அல்ல. தலைமையமைச்சர் மன்மோகன் சிங், காங்கிரஸ் எம்.பி., ராகுல் அல்லது மத்திய அமைச்சரவையில் உள்ள மூத்த அமைச்சர்கள்தான் பிரதிநிதிகளாக இடம்பெற வேண்டும். தலைமையமைச்சர் போன்ற முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் வந்தால்தான் நாங்கள் பேச்சு நடத்துவோம்” இவ்வாறு ஹசாரே ஆதரவாளர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
அண்ணா ஹசாரேயின் உண்ணாநோன்பு அறப்போராட்டம் நேற்று ஏழாவது நாளாக தொடர்ந்தது. நேற்று விடுமுறை நாள் என்பதால் ராம்லீலா மைதானத்தில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்றுகூடி உழல் எதிர்ப்பு போராட்டத்திற்கு வலுசேர்த்தனர்.
அத்துடன் ஹசாரே வாழ்த்து கோஷங்கள், அரசு எதிர்ப்பு கோஷங்கள் என திடலில் திரண்டவர்கள் உணர்ச்சிப் பெருக்குடன் காணப்பட்டனர். ஏழு நாட்களாக சாப்பிடாமல் இருப்பதால் ஹசாரே நேற்று மிகவும் சோர்வாக காணப்பட்டார். பெரும்பாலான நேரங்கள் படுக்கையிலேயே இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.